Sunday 10 December 2017

என்னைக் கவர்ந்த புலமைப்பித்தன் பாடல்கள்



அப்போது நான், எங்கள் வங்கியின் நகரக் கிளை ஒன்றில் பணிபுரிந்து கொண்டு இருந்த நேரம். எங்கள் வங்கி இருந்த இடத்திற்குப் பின்புறம் ஒரு பெரிய பஜார். கலர் டீவிகள் மற்றும் டீவி டெக்குகள் புழக்கத்தில் வந்தநேரம் என்பதால், பெரும்பாலும் அங்கு எலக்ட்ரானிக் கடைகள்தான். அங்கு இருந்த ஒரு “ஸ்நாக்ஸ்’ செண்டருக்கு சென்று ஏதாவது நொறுக்குத் தீனியும், காபியும் சாப்பிட முற்பகல் ஒரு தடவையும், பிற்பகல் ஒரு தடவையும் நண்பர்களுடன் செல்வது வழக்கம். அப்போது அந்த பஜாருக்கு நாங்கள் செல்லும் போதெல்லாம்,   ஒரு கடையில், ஒருபடத்தின் ஒரு பாடலை (கடைக்காரருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை) அடிக்கடி சத்தமாக வைப்பார்கள். அந்த பாடல் இதுதான் 

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்

இந்த பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். படத்தின் பெயர் “எல்லோரும் நல்லவரே” (1979) இசை அமைத்தவர் வி. குமார் - பாடியவர்: K.J.யேசுதாஸ். பாடலின் ஒவ்வோரு வரியையும் அவரது அனுபவப்[ பிழிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாடலின் தெளிவான ஒலி- ஒளிக்காட்சி (Video) யூடியூப்பில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை என்பது எனது குறை. 

புலவர் புலமைப்பித்தன்

தான் சினிமாவுக்கு பாடல் எழுத வந்தது குறித்து புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ''ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று சொல்லுகிறார். புலமைப்பித்தன் என்றவுடன், பஞ்சுப் பொதியை வைத்தது போன்ற நரைத் தலைமுடியும், பெரிய மீசையும் கொண்ட அவரது முகமும் கூடவே மறக்க முடியாத சில பாடல்களும் எனக்கு நினைவுக்கு வரும். சில பாடல்களை நான் வானொலியில் குறிப்பாக இலங்கை வானொலி வர்த்தக சேவையில், அடிக்கடி கேட்டு ரசித்தாலும் பின்னாளில்தான் இவை புலமைப்பித்தன் எழுதியது என்று எனக்கு தெரிய வந்தது. தமிழின் மீது தணியாத பற்று கொண்ட இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி. இந்த இரண்டும்  இவரது பாடல்களில் எதிரொலிக்கக் காணலாம்

எம்.ஜி.ஆர் பட பாடல்கள்:

எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க கட்சி (1972 இல்) தொடங்கியவுடன் அவருடன் சென்ற முக்கியமானவர்களில் புலவர் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர் புதிதாக கட்சியை துவக்கினாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை. (தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகும் வரை) நிறுத்தவில்லை. அப்போது புலவர் புலமைப் பித்தன் அவரது படங்களுக்கு எம்ஜிஆர் பார்முலா பாடல்களையும், எழுதியுள்ளார். கட்சி தொடங்கிய நேரம் என்பதால், பல பாடல்களில் அரசியலும், எம்,ஜி,ஆர் புகழ் பாடுதலும் அதிகம் இருந்தன.

ஓடி ஓடி உழைக்கனும் – நல்லநேரம் (1972), சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே– உலகம் சுற்றும் வாலிபன் (1973)  போன்ற பாடல்களை குறிப்பிடலாம்.

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று – (நேற்று இன்று நாளை (1974) – என்ற பாடலில் வரும்

தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

என்ற வரிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல் நையாண்டி செய்ய பயன்படுவதைக் காணலாம்.
எம்.ஜி.ஆரை காவிரி நதியோடு ஒப்பிட்டு ஒரு பாடல். நீங்க நல்லா இருக்கனும்  (இதயக்கனி (1975) என்ற பிரபலமான பாடல்.

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரி

என்ற வரிகள் காவிரியின் பெருமையைச் சொல்லும். அப்போது படத்தில், குடகு தொடங்கி காவிரி வரை படக்காட்சி அருமையாக இருக்கும்.
இந்தப் பச்சைக்கிளிக்கொரு – என்று தொடங்கும் பாடலில் (நீதிக்கு தலை வணங்கு (1976)

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

என்று வரும் வரிகளை மறக்க முடியாது.

பெரும்பாலும் எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் எழுதிய, திரைப்படக் கவிஞர்கள் அனைவரும் பொதுவுடைமைக் கொள்கைகளை வைத்தே பாடல்களை எழுதியிருப்பதைக் காணலாம். அதிலும் நமது கவிஞர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி. இதோ இந்த “நாளை உலகை ஆள வேண்டும்” என்று தொடங்கும் (உழைக்கும் கரங்கள் (1976) இந்த பாடல் வரிகளைக் காணுங்கள்.

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
என்றும் நியாயங்கள் சாவதில்லை

இந்த பாடலை கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள திரையை கிளிக் செய்யுங்கள். ( நன்றி: Youtube - https://www.youtube.com/watch?v=36yep8xmxkI )

இந்த பாடலைப் பற்றி சொல்லும்போது, “எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற - நாளை உலகை ஆள வேண்டும்  … … … என்கிற பாடல். “ என்று சொல்லுகிறார் புலவர்
.
மற்ற பாடல்கள்

கவிஞர் புலமைப்பித்தன் எம்ஜிஆர் படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

மதனமாளிகை (1976) என்ற படத்தில் வரும்

ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி
வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம் தாயவள்
அன்புத் தேனில் குளிக்கிறது

என்ற பாடல் அப்படியே ஒரு சித்திரத்தை மனக்கண் முன் நிறுத்துகிறது.
கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. இராமன் தனது மனைவி சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் கானகம் போகின்றான். இந்த காட்சியை கம்பர் (அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம்)

சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ

என்று அழகாக வருணிப்பார். -=  நமது கவிஞர் புலமைப் பித்தன் இராமன் முன் செல்ல, சீதை பின் தொடர்ந்த காட்சியை ‘வரப்பிரசாதம்’  (1976) என்ற படத்தில்,

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணின்மணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

என்று அழகான தமிழ்நடையில் வார்த்தைகளை தெளித்து இருப்பார்.
நான் அப்போதுதான் முதன்முதலாக வேலை கிடைத்து, மணப்பாறையில், வங்கியில் வேலைக்கு சேர்ந்த நேரம்.. அப்போது அங்குள்ள தேநீர் கடைகளில் உள்ள டூ இன் ஒன் டேப்புகளில் இளையராஜா பாடல்கள் அதிகம் ஒலிபரப்பாகும். அவற்றுள் ஒன்று தீபம் (1977) என்ற படத்தில் வரும் இந்த பாடல். 

பூவிழி வாசலில் யாரடி வந்தது 
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
 
அழைக்குது எனையே

நடிகர் கமலஹாசன் நடித்த படங்களில் எனக்கு பிடித்தமான படங்களில் ஒன்று நாயகன் (1987) சுமார் முப்பது வருடத்திற்கு முன்பு வந்த இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படம். இதில் வரும் இந்த பாடலை இன்று கேட்டாலும் எனது உதடுகள் என்னையும் அறியாமல் இந்த பாடல் வரிகளை முணுமுணுக்கும்.

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)

உன்னால் முடியும் தம்பி (1988 ) என்ற படத்தில் நடிகர் கமலஹாசனுக்காக இவர் எழுதிய பாடல் 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல –
எங்க பாரதத்தில் சொத்துச் சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல –
ஜனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல –
இது நாடா இல்ல வெறும் காடா –
இதைக் கேட்க யாரும் இல்ல தோழா

மேலே சொன்ன, இந்த பாடலை கண்டு கேட்டு மகிழ மேலே உள்ள திரையை கிளிக் செய்யுங்கள். ( நன்றி: Youtue - https://www.youtube.com/watch?v=BefkDBj5gSw )

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று



போன்ற ( படம்: நேற்று இன்று நாளை ) அருமையான காதல் பாடல்களையும் நமது புலமைப்பித்தன் திரையுலகிற்கு தந்து இருக்கிறார்.

43 comments:

  1. புலமைப்பித்தனின் எல்லா பாடல்களுமே அற்புதமானவை நான் ரசித்து கேட்பதுண்டு இன்றுவரை...

    அதேநேரம் எம்ஜிஆரை வளர்த்து விடுவதற்கு (கொள்கைப்பாடல்கள் என்ற பெயரில்) ஜால்ராப் பாடல்கள் எழுதியவர்களில் இவரும் உண்டே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

    இன்றைய அரசியலின் அவலநிலைக்கு இந்தவகை பாடல்கள்தான் அஸ்திவாரமிட்ட வித்து.

    ஒரு தமிழன் கேரளாவில் காமெடியனாககூட நடிக்க வாய்ப்பு கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. // புலமைப்பித்தனின் எல்லா பாடல்களுமே அற்புதமானவை நான் ரசித்து கேட்பதுண்டு இன்றுவரை...//

      நீண்ட கருத்துரையும், தமிழ்மணத்தில் வாக்களிப்பும் தந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      // அதேநேரம் எம்ஜிஆரை வளர்த்து விடுவதற்கு (கொள்கைப்பாடல்கள் என்ற பெயரில்) ஜால்ராப் பாடல்கள் எழுதியவர்களில் இவரும் உண்டே என்ற வருத்தம் எனக்கு உண்டு. //

      என்ன பண்ணுவது. நான் மாட்டேன் என்று, புலமைப் பித்தன் மறுத்து இருந்தால், இன்னொருவர் அங்கு வந்திருப்பார். நமக்கு புலவர் அறிமுகம் ஆகி இருக்க மாட்டார். கிடைத்த சினிமா சந்தர்ப்பத்தை புலவர் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.

      // இன்றைய அரசியலின் அவலநிலைக்கு இந்தவகை பாடல்கள்தான் அஸ்திவாரமிட்ட வித்து.//

      நானும் எனது நண்பர் ஒருவரும் அரசியல் பேசிக் கொண்டு இருந்தபோது அவரும் இதே கருத்தைத்தான் சொன்னார். அவருக்கு நான் சொன்ன பதில் “ இந்த தமிழக மக்களை, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சரியாகவே எடை போட்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர் “.

      // ஒரு தமிழன் கேரளாவில் காமெடியனாககூட நடிக்க வாய்ப்பு கிடைக்காது. //

      இங்கு தமிழ்நாட்டில் யாரும் ( நான் உட்பட ) எம்.ஜி.ஆரை ஒரு மலையாளியாகவே நினைக்கவில்லை. அவரும் தமிழ்நாட்டில் ஒரு தமிழனாகவே வாழ்ந்தார். (உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ‘வணக்கம்’ என்ற நூலை வாசித்து பாருங்கள் )

      Delete
  2. எடுத்தாண்டிருக்கும் பல பாடல்களை நானும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். கிடைத்த சந்தர்ப்பங்களிலும், தங்களது கருத்தை அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் கவிஞர்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. புலமைப் பித்தன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது,
    "புத்தம் புதிய புத்தகமே-- உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளரும் செந்தமிழே-- உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்" என்ற திரைப்பாடல்.

    பெண்ணுக்கு புத்தகத்தை உவமையாக்கிய அவரது புதுமையான கற்பனையை எண்ணிப் பார்க்கின்ற நேரத்திலேயே, "சாதி மல்லி பூச்சரமே.." என்ற அவரது இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
    2. மேலே குறிப்பிட்டிருக்கும் புத்தம் புதிய புத்தகம் நீ-- உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் என்று தான் கவிஞர் எழுதியிருக்க வேண்டும்.

      முதல் அடியின் ஈற்று வார்த்தையான 'நீ'--க்கு பொருத்தமாக இரண்டாம் அடியின் ஈற்று வார்த்தையான 'நான்'.

      இசை அமைதிக்காக 'புத்தகம் நீ' என்பதனை 'புத்தகமே' என்று மாற்றி விட்டார்கள் என்பது என் எண்ணம்.

      Delete
  4. //புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
    பொங்கிவரும் கங்கை உண்டு
    பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல –
    எங்க பாரதத்தில் சொத்துச் சண்ட தீரவில்ல.. //

    'எங்க பாரதத்தில் சோத்துச் சண்ட தீரவில்லை' என்று நினைக்கிறேன்.

    நம் நியாயமான கோபத்தை தட்டி எழுப்பும் அற்புத பாடல் இது.

    ReplyDelete
    Replies
    1. சொத்துச்சண்டை என்பதே இன்றைய இந்தியாவுக்குப் பொருந்துகிறது. ஒரு மசூதிக்காகவும் ஒரு கோயிலுக்காகவும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட பல்லாயிரக்கணக்கானோர் பதைபதைப்புடன் வாழும் நிலை நமக்கு.

      Delete
    2. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கும், மற்றும் அன்பர் P.விநாயகம் அவர்களின் கருத்துரைக்கும் நன்றி.
      நான் இந்த பதிவினை எழுதத் தொடங்கிய போது,

      // பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல –
      எங்க பாரதத்தில் சொத்துச் சண்ட தீரவில்ல //

      என்ற வரிகளில் முதலில் “சோத்துச் சண்ட தீரவில்ல” – என்றுதான் குறிப்பிட்டு இருந்தேன். அப்புறம் பாடலை யூடியூப்பில் கேட்டபோது, இந்த வரியை பாடகர் ( எஸ்.பி.பாலசுப்ரமணியன் ) “சொத்துச் சண்ட தீரவில்ல” என்று உச்சரித்து பாடியிருப்பதால் நானும் அவ்வாறே மாற்றி விட்டேன். இதுவும் பொருத்தமானதாகவே உள்ளது.

      ( ஒருபாடலில் யேசுதாஸ் அவர்கள் “திருக் கோயிலே ஓடி வா” என்று பாடுவதற்குப் பதிலாக “தெருக் கோயிலே ஓடிவா” என்று பாடி இருப்பார்.)

      Delete
    3. புஞ்சை நிலங்கள் உண்டு
      நன்செய் நிலங்கள் உண்டு
      பொங்கி வரும் கங்கை உண்டு
      இருப்பினும் பாரதத்தில் பஞ்சம் மட்டும் மாறவில்லை---
      என்ற முன்னிட்ட வரிகளுக்கு
      சோத்துச் சண்டை தீரவில்லை என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
      அதனால் தான் குறிப்பிட்டேன்.

      நாம் புலமைப்பித்தனைப் பற்றித் தான் எழுதுவதால் அவர் சோத்துச் சண்டை என்றே பாடலை எழுதியிருப்பார் என்று கொள்வோம்.

      //( ஒருபாடலில் யேசுதாஸ் அவர்கள் “திருக் கோயிலே ஓடி வா” என்று பாடுவதற்குப் பதிலாக “தெருக் கோயிலே ஓடிவா” என்று பாடி இருப்பார்.)//

      சரியான உதாரணம் காட்டியிருக்கிறீர்கள். அதே மாதிரி கண்டசாலாவின் உச்சரிப்பிலும் நிறைய மாற்றங்களைக் கண்டிருக்கிறேன்.

      வேற்று மொழிக்காரர்கள் பாடுவதால் இந்தக் குறைகள் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன போலும். நாமும் அவர்கள் குரல் வளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தவறுகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

      Delete
    4. // நாம் புலமைப்பித்தனைப் பற்றித் தான் எழுதுவதால் அவர் சோத்துச் சண்டை என்றே பாடலை எழுதியிருப்பார் என்று கொள்வோம். //

      அய்யா உங்களின் மறு வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். ஒரு பேட்டியில் கூட புலவர் புலமைப்பித்தன் அவர்கள் “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு “ என்று தொடங்கும் பாடலில் “ எங்க பாரதத்தில் சோத்துச் சண்ட தீரவில்ல “ என்றே சொல்லி இருக்கிறார். இந்த பதிவினில், “சொத்துச் சண்டை” என்றே இருந்து விட்டுப் போகட்டும்.

      Delete
    5. //ஒருபாடலில் யேசுதாஸ் அவர்கள் “திருக் கோயிலே ஓடி வா” என்று பாடுவதற்குப் பதிலாக “தெருக் கோயிலே ஓடிவா” என்று பாடி இருப்பார்//

      அந்தமான் காதலி படப்பாடல். "நினைவாலே சிலை செய்து எனும் பாடல். இதேபோல ஊருக்கு உழைப்பவன் படத்தில் "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" என்பதை பில்லைத்தமிழ் பாடுகிறேன்" என்றும் பாடியிருப்பார்!

      Delete
    6. நண்பர் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி. ல, ள வேறுபாடு நுணுக்கமாகக் கவனித்தால்தான் தெரியவரும். ஆனால் திருக்கோயில் என்பது தெருக்கோயில் ஆனது வெளிப்படையாகிப் போனது.

      Delete
  5. அழகான தொகுப்பு...சிற்பி ஏன் அம்மி கொத்தவந்தார்... சூழ்நிலைக்கு பாட்டெழுதாமல் தம்மை சூழ்ந்தப்நிலைக்கு பாட்டெழுதிய்து வருத்தமே...கில்லர்ஜி சொன்னது போல்...அவர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. //..பாடலின் ஒவ்வோரு வரியையும் அவரது அனுபவப்[ பிழிவாக எடுத்துக் கொள்ளலாம்....//

    இருக்கலாம். ஆனால் அப்படத்தின் காட்சிக்கு பொருத்தமான பாடல் இது. காட்சியை உணர்ந்து எழுதியிருக்கிறார். ஊரையும் உறவுகளையும் தன் கொடிய குணத்தால் பகைத்த ஒருவனின் இறுதிச்சடங்கை நடாத்துவார் யாருமில்லை. ஒரு கட்டை வண்டியில் போட்டு இழுத்துச்செல்கிறான் நகரசுத்தித் தொழிலாளி. இக்காட்சியைத்தான் பாவலர் காட்டி ஏன் எதற்காக என்று விளக்க. பாட்டின் கருத்துச்செறிவும், பாடகரின் துக்கந்தேயும் குரலும் நம் நெஞ்சைப்பிழிகின்றன. நான் ஒரு கச்சேரியில் யேசுதாஸ் பாடிக்கேட்டேன்.

    இங்கு போட்டப்பட்டிருக்கும் அனைத்துப்பாடல்களில் இறுதிப்பாட்டே நல்ல சுவையைத்தருகிறது எனக்கு. மற்றபாடல்களிலும் இலக்கியச்சுவை செறிந்திருக்கிற்து என்றாலும்.

    ஒருவரின் உருவத்துக்கும் உள்ளத்துக்கும் தொடர்பில்லை என்று புகைப்படம் காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்பர் P.விநாயகம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. ‘பகை கொண்ட உள்ளம் ‘ என்ற பாடலுக்கு யூடியூப்பில் இருக்கும் திரைப்படக் காட்சியும், நீங்கள் குறிப்பிடும் காட்சியும் வேறு வேறாக உள்ளன.

      // ஒருவரின் உருவத்துக்கும் உள்ளத்துக்கும் தொடர்பில்லை என்று புகைப்படம் காட்டுகிறது. //

      என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பதும் சரிதான்.

      // எனக்குள் ஒரு அழல் இருக்கிறது. எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சிலபொழுது எரிந்து கொண்டும் சிலபொழுது கனிந்து கொண்டும். அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,

      உன்னைப் படைத்த பிரம்மனே
      உன்னைப் பார்த்து ஏங்கினான்
      காதல் பிச்சை வாங்கினான்

      என்றும் எழுத முடிகிறது. அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும் //

      - என்பது புலவரின் பேட்டி.

      ( ஒரு அவசர வேலையாக நேற்று திருவையாறு போய் விட்டேன். இதுவே உங்களது கருத்துரைக்கு எனது மறுமொழி எழுதிட தாமதம் ஆன காரணம் )

      Delete
  7. இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள்
    அனைத்துமே மனம் கவர்ந்தவை..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. சாதாரணமாகப் பொதுவுடமை வாதிகளின் சிந்தனை மக்களின் நிலையையும் அவரவர் அபிலாக்ஷைகளையும் எடுத்துச் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கூர்மையான கருத்தினுக்கு நன்றி.பொதுவுடமை என்றாலே கலகக்குரல் தானே.

      Delete
  9. அருமை! இளங்கோ! புலவர் புலமைப்பித்தன் என்னுடைய நெருங்கிய நண்பர்! இருவரும் மாநகராட்சிப் பள்ளியிலேதான் பணியாற்றினோம்!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அவர்களுக்கு நன்றி. நீங்களும் புலவர் புலமைப்பித்தனும் நெருங்கிய நண்பர்கள், ஒரே பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் என்று அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  10. அருமையான பாடல்கள். நல்லதொரு அலசல் .- பாபு

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. கவிஞர் புலமைப்பித்தன் பாடல்கள் எப்போதுமே மனதை நிறைக்கும் காணொளியும் ரசித்தேன் பதிவில் பகிர்ந்த பாடல்களையும் கேட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  12. அருமையானப் பாடல்களின் தொகுப்பு ஐயா
    ரசித்தேன்
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி

      Delete
  13. பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
    youtube ல் ஒலிக்கற்று
    https://www.youtube.com/watch?v=YuhOzHP6Af8

    ReplyDelete
    Replies
    1. அன்பர் பாபுவின் இரண்டாம் வருகைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் இணையதள முகவரியில் யேசுதஸ் ஸ்டில்கள் மட்டுமே உள்ளன. இந்த பாடலுக்கான நேரடியான படக்காட்சி இல்லை.

      Delete
    2. அதனால்தான் ஒலி கற்று என எழுதினேன். ஆனால் அந்த பாடல் முடிந்தஹ்தும் அடுத்த படத்தில் uncut movie என்று நேரடி காட்சி வருகிறது
      https://www.youtube.com/watch?v=cQyWQl99sl4

      Delete
  14. எடுத்துக் காட்டிய பாடல்கள் வெகு சிறப்பு. தென்பாண்டிச் சீமையிலே பாடல் எனக்கும் பிடித்த பாடல்....

    ReplyDelete
  15. நீங்கள் எழுதியிருப்பது போல, நாயகன் பாடல் மறக்கவே முடியாதது. எப்போது கேட்டாலும் உடனேயே மனம் கனமாகி விடும்.
    அது போல நீதிக்கு தலை வணங்கு பட‌த்தில் வரும் ' இந்தப்பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூ' ஜேசுதாஸ் பாடியிருக்கும் விதமும் பாடல் வரிகளும் காலத்தால் அழியாததொன்று!

    ReplyDelete
  16. அற்புதமான பாடல்கள். எனக்கும் இதில் பல பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் இரண்டாம் வருகைக்கு நன்றி.

      Delete
  17. என் மரியாதைக்குரிய கவிஞர் அய்யா புலமைப்பித்தன் அவர்கள். இப்போதும் கைபேசியில் உரையாடல் தொடர்கிறது. சிவக்குமாரினௌ 100 வது படம் ரோசாப்பூ ரவிக்கைகாரி பாட்டு உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்சக்கிளி... அருமையான பாடல். அவருக்கும் பிடித்தமான பாடல். அவருடைய எம்ஜிஆர் பாடல்கள்..No comments, அவர் சார்ந் அரசியல் ...ஈழம் ஆதரவுநிலை காரணிகளும் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      //என் மரியாதைக்குரிய கவிஞர் அய்யா புலமைப்பித்தன் அவர்கள். இப்போதும் கைபேசியில் உரையாடல் தொடர்கிறது.//

      மகிழ்ச்சியான செய்தி.

      //அவருடைய எம்ஜிஆர் பாடல்கள்..No comments, அவர் சார்ந் அரசியல் ...ஈழம் ஆதரவுநிலை காரணிகளும் காரணம். //

      நானும் அவர் ஒரு நல்ல கவிஞர் என்ற நிலையிலேயே அவரது கவிதைகளை ரசிக்கிறேன்.


      Delete
  18. தேடிப்பிடித்து அருமையாகத் தெரிவு செய்து தந்துள்ளீர்கள். அனைத்துமே அருமை.

    ReplyDelete
  19. மிகச்சிறப்பான தொகுப்பு. அருமையான பாடல்கள்.He was overshadowed by other two lyricists. He is a great lyricist.

    ReplyDelete