Tuesday, 15 August 2017

நடிப்பு சுதேசிகள்இன்று (15.08.2017) இந்தியாவின் 71 ஆவது சுதந்திரதினம் (15 ஆகஸ்ட் 1947) இந்தியா, சுதந்திரம் என்றவுடனேயே, எனது பள்ளிப் பருவத்தில், அந்நாளில் வரலாற்றுப் பாடத்தில் படித்த இந்திய விடுதலை வரலாறும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரம் பிள்ளை, போன்ற தலைவர்களின் படங்களும் நினைவில் வந்தன. கூடவே நான் பெரியவன் ஆனதும், பிற்பாடு பார்த்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தமிழ் திரைப்படமும் நிழலாடியது. இந்த படம் 1961 இல் வெளிவந்தது. இன்றும் வ.உ.சி என்றால், இந்த படத்தில்,  சிவாஜி கணேசன் உருவாக்கிய பிம்பம்தான் முதலில் மனக்கண்ணில் வரும். அப்புறம்தான் வ.உ.சி.யின் உண்மையான தோற்றம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வ..உ..சி.யாகவே மாறி உருக்கமாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் எழுதியது ஆகும். 

இவற்றுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ’நெஞ்சில் உரமுமின்றி’ என்ற பாடல், நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று. (திரைப்படத்தில் பாரதியின் இந்த பாடலில் ஒருசில வரிகளை மட்டுமே கையாண்டுள்ளனர்)

                           நடிப்பு சுதேசிகள்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
-    மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டிட படத்தில் ‘க்ளிக்’ செய்யுங்கள்.
                          video 
 
( Video Courtesy – Youtube - https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg )

    அனைவருக்கும் எனது இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.
   

Monday, 7 August 2017

பொன்மொழியும் நானும்


உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து எனக்கு ஒரு பழக்கம். ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் அல்லது பழைய டைரியில் எனக்குப் பிடித்தமான தமிழ் அல்லது ஆங்கில பொன்மொழிகளை, பழமொழிகளை, மேற்கோள்களை எழுதி வைத்துக் கொண்டு அடிக்கடி படிப்பது. இந்த பழக்கம் காரணமாக நான் வேலைக்குப் போனதும் புத்தகக் கடைக்குள் அல்லது புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தால் முதல் வேலையாக நல்ல ENGLISH QUOTATIONS உள்ள புத்தகங்களை வாங்கி விடுவேன். இப்போது குறைத்துக் கொண்டேன்.

பொன்மொழி ஸ்டாண்டு

அதேபோல, ஞாயிறு விடுமுறையில் வீதியோர கடைகளில் விற்கப்படும், பொன்மொழிகள் அடங்கிய சுவர் சித்திரங்களையோ அல்லது மேஜை மீது வைக்கும் சிறிய ஸ்டாண்டுகளையோ பிடித்தால் வாங்குவது வழக்கம். அவைகளுள் பல காணாமல் அல்லது பழையன கழிதழில் இல்லாமல் போய் விட்டன. இருப்பினும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு,  நான் வாங்கிய டெஸ்க் டாப் பொன்மொழி ஸ்டாண்டு ஒன்று மட்டும் தப்பி அப்படியே உள்ளது. எங்கள் வீட்டு ஹாலில் இருந்த, அந்த ஸ்டாண்டை நானும் அடிக்கடி எடுத்து படித்துப் பார்ப்பது வழக்கம்.. ஆனால் அதில் உள்ள Rules of Living என்ற பொன்மொழிக்குச் சொந்தக்காரர் யார் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அதில் சொல்லியவர் பெயர் குறிப்பிடப் படவில்லை. நானும் ’யாரோ’ என்று தெரிந்து கொள்ள முயற்சிக்க வில்லை.

(படம் மேலே) இப்போது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் மேஜையில் உள்ள அந்த பொன்மொழி ஸ்டாண்டு)

(படம் மேலே) இந்த பதிவிற்காக வீட்டு வாசலில் உள்ள பூச்சாடியில் அந்த ஸ்டாண்டை வைத்து எடுத்த படம்)

சொன்னது யாரோ – விடை

சென்ற மாதம் எங்கள் வீட்டிற்கு ஒரு நிகழ்வின் போது, வந்து இருந்த எனது உறவினர் ஒருவர் அந்த ஸ்டாண்டை எடுத்துப் பார்த்து விட்டு விவரம் கேட்டதோடு பொன்மொழியைச் சொன்னது யார் என்றும் கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. “’இது பொறுப்பதில்லை தம்பி’” என்ற வீமனின் ஆவேசம் போல, அன்று இரவே கூகிளில் Never put off till tomorrow what you can do today – என்று அந்த பொன்மொழியின் முதல் வாசகத்தை கொடுத்து தேடினேன். சொல்லியவர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) என்று விடை கிடைத்தது. பின்னர் Google Image இல் அவரது படத்தோடு முழு பொன்மொழி வரிகளும் கிடைத்தன.

(PICTURES ABOVE TWO - COURTESY: GOOGLE IMAGES)


தாமஸ் ஜெபர்சன் பற்றிய சில சுவையான தகவல்கள் (கூகிள் தேடுதல் உதவியில் எழுதப்பட்டது)

தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson 13.04.1743 – 04.071826) அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் (United States of America) மூன்றாவது குடியரசுத் தலைவராக (1801 – 1829) இருந்தவர். மேலும் இவர் ஒரு அரசியல் தத்துவஞானி (Political Philosopher), ஜனநாயகத் தூதுவர் (The Apostle of Democracy) மக்களின் மனிதர் (Man of the People) மற்றும் The Pen of the Revolution என்றெல்லாம் அன்பாக அழைக்கப்பட்டவர்.

(மேலே படத்தில்) இடமிருந்து வலம் 1.ஜார்ஜ் வாஷிங்டன் 2. தாமஸ் ஜெபர்சன் 3.தியோடர் ரூஸ்வெல்ட் 4.ஆப்ரஹாம் லிங்கன்)

ஐக்கிய அமெரிக்காவை ( United States of America) உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். அதனாற்றான், மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) என்ற, தேசிய நினைவிடத்தில் உள்ள சிற்பங்களில் இவரது சிலையும் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இவர் எழுதிய ’சுதந்திரத்தின் பிரகடனம்’ (United States Declaration of Independence) என்ற அறிக்கை (1776) உலகப் புகழ் பெற்ற ஒன்று. இவ்வாறு மனித உரிமை பற்றி உரக்கப் பேசி, அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் ஐநூறு அடிமைகளுக்கு சொந்தக்காரர், அடிமை வியாபாரி என்றும் சொல்லப்படுகிறார். இவரது தந்தை வழி, இவை இவருக்கு வந்து இருக்கலாம். ஆனால் பிற்பாடு இவரேதான், இந்த அடிமை வியாபாரத்தைக் கடும் கண்டனம் செய்ததோடு 1807இல் International Slave Trade ஐ தடை செய்தவர் என்பதும் குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

1791 இல் இவர் உருவாக்கிய ’பழங்குடியினர் மொழிகளின் சொற்களஞ்சியம்’ பழங்குடி, மொழியியல் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.

தான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையில் முதன்முதலாக (1805 இல்) ரம்ஜான் பண்டிகையை  கொண்டாடச் செய்தவர், தாமஸ் ஜெபர்சன், 

                  .                                         .xxxxxxxxxxxxx.


பிற்சேர்க்கை (08 ஆகஸ்ட் 2017 – 03.00 p.m)

’காணாமல் போன கனவுகள்’ http://rajiyinkanavugal.blogspot.com வலைப்பதிவர் சகோதரி ராஜி அவர்கள், ” என்னை மாதிரி ஆளுங்களுக்காக தமிழ்ல மொழிப்பெயர்த்திருக்கலாம் “ என்று கருத்துரை சொல்லி இருந்தார். உடனே மூத்த வலைப்பதிவர் Er செல்வதுரை https://sigmafashions.blogspot.in அவர்கள், மேலே சொல்லப்பட்ட தாமஸ் ஜெபர்சன் பொன்மொழிகளை தமிழில் தந்துள்ளார் .( இருவருக்கும் நன்றி) 
  
இனிய தமிழில் இதோ பொன்மொழிகள்:

1. இன்று செய்ய முடிந்ததை நாளைவரை தள்ளிப்போடாதே
2. உன்னால் செய்ய முடிந்த வேலையை அடுத்தவர் செய்யும்படி அவரை சிரமப்படுத்தாதே
3. பணத்தை ஈட்டுமுன் அதை செலவழித்துவிடாதே.
4. மலிவு என்பதினால் மட்டுமே தேவையற்ற ஒரு பொருளை வாங்காதே, ஏனெனில் ஒருபோதும் அது நீ விரும்பும் பொருளாக இருக்காது.
5. தற்பெருமையானது பசி, தாகம் மற்றும் கடுங்குளிர் ஆகியவற்றைவிட நம்மை அதிகமாகப் பாதிக்கும்.
6. குறைவாகச் சாப்பிட்டுவிட்டது குறித்து ஒருபோதும் நீ கலங்கவேண்டியது இல்லை.
7. விருப்பத்தோடு செய்யும் பணி ஒருபோதும் உனக்கு அலுப்பதில்லை.
8. நிகழாத தீமைகள் ஒருபோதும் உன்னைக் காயப்படுத்த அனுமதிக்காதே
9. எந்தக் காரியத்தையும் முறையாகக் கையாளு.
10. கோபமாய் இருக்கும்போது பத்துவரை எண்ணு. அதீதக் கோபமாய் இருக்கும்போது நூறுவரை எண்ணு.

Friday, 4 August 2017

தமிழகம் - நள்ளிரவு அரசியல்நேற்று (03.08.17) காலை இண்டர்நெட்டில் தமிழ்செய்திகளை வாசித்துக் கொண்டு இருந்தேன். ’சென்னை மெரினா கடற்கரை அருகே வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் உருவச் சிலை, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த படியினால், இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மீண்டும் அவரது நினைவு மண்டபத்தில் வைக்கப்படும் (4 மணி நேரத்திற்கு முன்பு) என்று செய்தி வந்தது. ஒரு காலத்தில் சிவாஜிக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த ரசிகர் கூட்டம் இன்று அறுபது அல்லது எழுபது வயதை கடந்தவர்களாகவே இருப்பார்கள். பாதிப்பேர் மறைந்தும் போயிருக்கலாம். எனவே சிவாஜி சிலையை அகற்றும் போது, அவரது ரசிகர்களால் பிரச்சினை ஏதும் எழ வாய்ப்பில்லை. ஆனாலும் போக்குவரத்தை முன்னிட்டு இரவோடு இரவாக இதனை செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இது மட்டுமல்ல, நள்ளிரவில் நமது இந்தியா சுதந்திரம் பெற்றதாலோ என்னவோ, பல நிகழ்வுகள், நமது நாட்டில் இரவுநேரக் காட்சிகளாகவே அமைந்து விட்டன. அண்மையில் பாராளுமன்றத்தில் ஜீஎஸ்டி சட்டம் இரவுநேர பார்லிமெண்ட் கூட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மரணம், கலைஞர் கைது, சங்கராச்சாரியார் கைது, ஜெயலலிதா மரணம் என்று பல நிகழ்வுகள் மனத்திரையில் வந்தன.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மரணம் (1987)

விடிந்தால் கிறிஸ்துமஸ். காலை எழுந்தவுடன் கேட்ட செய்தி , நேற்று (24.12.1987) எம்.ஜி.ஆர் மரணம் என்பதுதான். எதிர்பார்த்த மரணம்தான். ஏனெனில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட, எம்.ஜி.ஆர் நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் இறந்தவுடன் எம்.ஜி.ஆர் குடும்பத்தினரின் ஒப்புதலோடு, அதிகாலையிலேயே கலைஞர் கருணாநிதி ராமாவரம் சென்று எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செய்தார் என்று ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் உண்டு. அதேபோல அந்த நள்ளிரவில் எம்.ஜி.ஆர் மறைவு செய்தி கேள்விபட்டு ஜெயலலிதா அங்கு வந்ததாகவும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

எம்.ஜி.ஆர் இறந்த போது தமிழ்நாட்டில் பெரும் கலவரம். ஏதோ கருணாநிதியே எம்.ஜி.ஆரை கொன்று விட்டது போன்று தி.மு.கவினரது இருப்பிடங்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருந்த ஒரே கருணாநிதி சிலை அடியோடு அடித்து நொறுக்கப்பட்டது. சிலையின் நெஞ்சில் கடப்பாரையை வைத்து இடிப்பது போல் ஒரு படம் வெளியானது.அப்போதும் கலைஞர் கருணாநிதி ஒரு கவிதை எழுதினார்.

பரவாயில்லை –                                                            
அந்த சின்னத்தம்பி                                              
நெஞ்சில்தான் குத்துகிறான்                                                  
முதுகில் குத்தவில்லை 

என்பதாக எனது நினைவு. அந்த போட்டோவையும், கவிதையின் முழு வடிவையும் ரொம்ப நாளாக இண்டர்நெட்டில் தேடினேன். கிடைக்கவில்லை.

ராஜீவ்காந்தி கொலை (1991)

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை இரவு, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது நடந்த நிகழ்வுகளை, எனது அனுபவத்தை கீழ்க்கண்ட எனது பதிவினில் விவரமாக சொல்லி இருக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலையான அன்று http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_22.html

கலைஞர் கருணாநிதி கைது (2001)

அன்று (30.06.2001) நள்ளிரவு நல்ல உறக்கத்தில் இருந்தபோது, நண்பரோ அல்லது உறவினரோ (சரியாக நினைவில் இல்லை) எனக்கு போன் செய்து கலைஞர் கருணாநிதி கைது என்று சொன்னார்கள். உடன் டீவியில் செய்திகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று, கருணாநிதி கைது பற்றிய செய்தியையும் அடுத்தடுத்து நடந்த காட்சிகளையும் சன் டிவியில் நேரலையாக காட்டிக் கொண்டு இருந்தார்கள். இடையிடையே கருணாநிதியின் கையை ஒரு போலீஸ் அதிகாரி, முரட்டுத்தனமாக அழுத்தி இருப்பதையும், கொல்றாங்கப்பா என்ற அலறலையும் அடிக்கடி காண்பித்தார்கள். அப்புறம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மறியல் கண்டன ஊர்வலங்கள். பஸ் போக்குவரத்தே இல்லை. ஜெயலலிதா ஆட்சி என்பதால் தி.மு.கவினர் சற்று அடக்கியே வாசித்தார்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைது (2004) 

அன்று (11.11.2004) நள்ளிரவு முடிந்து அடுத்தநாள் தீபாவளி தொடக்கம். எனவே சீக்கிரமே எழுந்து விட்டேன். டீவியை போட்டேன். ’முக்கிய செய்தி – சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது ‘ என்று Breaking News ஓடிக் கொண்டு இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அப்புறம் கூடவே இருந்த சின்ன சங்கராச்சாரியாரும் கைது என்றும் செய்தி வந்தது. ஜெயலலிதா ஆட்சியில்  காஞ்சி சங்கராச்சாரியார் கைது என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. விடிந்ததும் முழு செய்தியும் வெளிவரத் தொடங்கியது. பா.ஜ.கவின் வட இந்தியத் தலைவர்கள் இந்த பிரச்சினையை ஆவேசமாக கண்டனம் செய்தனர். ஆனால் தமிழ்நாட்டிலோ அமைதியாகவே இருந்தனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதே நிகழ்வு கருணாநிதி ஆட்சியில் நடந்து இருந்தால் ஆட்சியையே கலைத்து இருப்பார்கள்.  

ஜெயலலிதா மரணம் (2016)

சென்ற ஆண்டு, செப்டம்பர், 22, 2016 அன்று இரவு அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 75 நாட்களாக அங்கு இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி அவ்வப்போது அவர் இறந்து விட்டதாக வதந்தி வரும். இல்லை இல்லை அவர் நன்றாகவே இருக்கிறார், இட்லி சாப்பிட்டார், தயிர்சாதம் சாப்பிட்டார் என்று சொல்லுவார்கள். அவ்வாறே ஒருநாள் (05.12.2016) மாலை அவர் இறந்து விட்டதாகவே ஒரு டீவி சேனலில் செய்தி வாசித்தார்கள். அப்புறம் மறுத்தார்கள். ஆனால் அன்று இரவே அவரது இறப்பை ஊர்ஜிதம் செய்தார்கள். அதிரடி அரசியலுக்கு பெயர் போன ஜெயலலிதாவின் மரணமே அரசியல் ஆகிப் போனது. அவரது மரணத்தில் நிறையவே சந்தேகங்கள் என்று அவரது அரசியல் சகாக்களே சொல்லுகின்றனர்.

முதல்நாள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற எனது மகளும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்தார்களா என்ற கவலையில், போனில் விசாரித்தேன். இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தோம்; அசதியாக இருக்கிறது தூங்கப் போகிறோம் என்றவுடன் விஷயத்தை சொன்னேன். அப்புறம்தான் அவர்களுக்கே விஷயம் தெரியும்.