Monday, 16 October 2017

என் மனம் தொட்ட கண்டசாலா பாடல்கள்அப்போதுதான் எங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு புஷ் ( BUSH ) டிரான்சிஸ்டரை அப்பா வாங்கி வந்தார். நான் அப்போது கல்லூரி மாணவன். அதனை வாங்கி வந்ததிலிருந்து மறக்க முடியாத அந்த இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்பதுதான் எனது பொழுது போக்கு. கல்லூரி பாட சம்பந்தமான குறிப்புகள் எடுக்கும் போது கூட, இந்த டிரான்சிஸ்டர் பாடிக் கொண்டே இருக்கும். ( அப்புறம் வந்தது பிலிப்ஸ் பெரிய ரேடியோ ) 

எப்போதும் அமைதியான குரல்தான்

அன்றைய இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் பெருமையை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்கலாம். ( அந்த ஒலி பரப்பு இப்போதும் உண்டா என்று தெரியவில்லை. டீவி வந்த பிறகு வானொலி கேட்பதே இல்லை ) அப்போதெல்லாம் அடிக்கடி ”பாடியவர் கண்டசாலா” என்று சொல்லி அவரது பாடல்களை ஒலிபரப்புவார்கள்; இவரே பல பாடல்களுக்கு இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். பெரும்பாலும் சோகப் பாடல்கள் அல்லது தத்துவப் பாடல்களாகவே இருக்கும். அந்த சோகத்திற்கு தகுந்தாற் போலவே அவரது குரலும் இழைந்தோடும். இன்னும் காதல் பாடல்களையும் அதே நளினத்தோடு அமைதியாகவே பாடியிருப்பார். அதிலும் நான் பிறப்பதற்கு முன்பு வந்த,  பார்த்திராத பழைய காலத்து படங்களில் வந்த பாடல்களாக இருக்கும்.

கண்டசாலா பாடல்களை நான் ரசித்தாலும், அவரைப் பற்றிய முழு விவரம் எனக்குத் தெரியாது. அப்போது பத்திரிகைகளிலும் அவ்வளவு விவரமாக எழுத மாட்டார்கள். அதிலும் இவர் ஒரு தெலுங்கு இசையமைப்பாளர் என்று மட்டும் அப்போது கேள்விப் பட்டு இருக்கிறேன்.

(இப்போது வீட்டுக்கு வீடு டீவி வந்து விட்டாலும், முன்புபோல கண்டசாலா பாடல்களை கேட்க முடிவதில்லை. எம்.கே.டி பாகவதர் பாட்டையே ஒலி பரப்புவதில்லை: அப்புறம் மற்றவர்கள் பற்றி என்ன சொல்வது?)

வாழ்க்கைக் குறிப்புகள் (நன்றி கூகிள்)

முழுப்பெயர்: கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் ( பிறப்பு 4 டிசம்பர் 1922 இறப்பு 11 பிப்ரவரி 1974 ) – தெலுங்கு பிராமணர் - பிறந்த ஊர்: சௌட்டா பள்ளி (ஆந்திரா) - தந்தையின் பெயர்: சூரய்யா கண்டசாலா – தாயாரின் பெயர்: ரத்தம்மா – விசாகப்பட்டினத்தில் இசைக் கல்லூரியில் பயின்றவர் – வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு 18 மாதம் சிறைவாசம் பெற்றவர் – நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் – தெலுங்கு, தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாளப் படங்களிலும் பின்னணி பாடி இருக்கிறார். – தெய்வபக்தி நிரம்பிய தனிப் பாடல்களையும் பாடி இருக்கிறார் ஐக்கிய நாட்டு சபையில் பாடும் வாய்ப்பு பெற்றவர் -  திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் – இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கப் பட்டுள்ளது. – கண்டசாலாவுக்கு சாவித்திரி, சரளாதேவி என்று இரண்டு மனைவிகள்; எட்டு குழந்தைகள். - கண்டசாலாவை பாராட்டும் வகையில் 2003 இல் இந்திய தபால்துறை இவருடைய படத்துடன் தபால்தலை வெளியிட்டுள்ளது.

தும்மலப்பள்ளியிலுள்ள கலாக்ஷேத்திரத்தில் கண்டசாலாவுக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது.
  
நான் ரசித்த பாடல்களில் சில

அமைதி இல்லாதென் மனமே
என் மனமே
அமைதி இல்லாதென் மனமே
என் மனமே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

காதலே தெய்வீகக் காதலே

( படம்: பாதாள பைரவி ( 1951 ) - பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxx

ஓ … தேவதாஸ் ..
ஓ … … பார்வதி.
.
( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & ஜிக்கி - இசை: C.R.சுப்புராமன்)

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)

உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…

( படம்: தேவதாஸ் ( 1953 ) -  பாடல்: கே.டி.சந்தானம் – பாடியவர்: கண்டசாலா - இசை: C.R.சுப்புராமன்)
xxxxxxxxxxxxxx

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

( படம்: கள்வனின் காதலி ( 1955 ) -  பாடல்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – பாடியவர்கள்; கண்டசாலா & P.பானுமதி - இசை: கண்டசாலா )
xxxxxxxxxxxxxxxx

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

( படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ( 1956 ) -  பாடல்: மருதகாசி – பாடியவர்: கண்டசாலா - இசை: தட்சிணா மூர்த்தி)
xxxxxxxxxxxxxxx

உல்லாசம் தேடும்
எல்லோரும் ஒருநாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம் 

( படம்: தெனாலிராமன் ( 1956 ) -  பாடல்: தமிழ் மன்னன் – பாடியவர்: கண்டசாலா - இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி)
xxxxxxxxxxxxxx

ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது

( படம்: எங்க வீட்டு மஹாலக்ஷ்மி ( 1957 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxx

ஆஹா இன்ப நிலாவினிலே,
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )

நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது

( படம்: மாயா பஜார் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்கள்; கண்டசாலா & P.லீலா இசை: கண்டசாலா )
Xxxxxxxxxx

கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்....
ஓதும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
 அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

( படம்: மஞ்சள் மகிமை( 1959 ) -  பாடல்: உடுமலை நாராயண கவி – பாடியவர்கள்; கண்டசாலா & P.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு )
xxxxxxxxx

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்னுக்குள் ஒன்னாக 

( படம்: அன்புச் சகோதரர்கள் ( 1973 ) -  பாடல்: கண்ணதாசன் – பாடியவர்: கண்டசாலா - இசை: கே.வி.மகாதேவன் )
Xxxxxxxxxxxxxx

எங்குமே ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்

( படம்: பலே ராமன் ( 1957 ) -  பாடல்: T.N.ராமையா தாஸ் – பாடியவர்; கண்டசாலா - இசை: T.A. கல்யாணம் ) இந்த பாடலைக் கண்டு கேட்டு களிக்க இங்கே கீழே திரையில் ‘க்ளிக்’ செய்யவும்
video
( Courtesey https://www.youtube.com/watch?v=pYQUU3SsFCw )

                                            (All Pictures and Video Courtesy : Google )

                                                               XxxxxxxxxxxX

  அனைவருக்கும் எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

Saturday, 14 October 2017

அண்டனூர் சுரா எழுதிய முத்தன் பள்ளம் - விமர்சனம்தோழர் ஆசிரியர் அண்டனூர் சுரா ( இயற்பெயர் சு.ராஜமணிக்கம்) அவர்கள், வீதி இலக்கிய அமைப்பு புதுக்கோட்டை வழியே எனக்கு அறிமுகம் ஆனவர். அவருடைய நூல்கள் எதனையும் நான் இதற்கு முன்னர் படித்ததில்லை. இவருடைய ’முத்தன் பள்ளம்’ என்ற நாவலை, அண்மையில் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற இந்தநூலின் வெளியீட்டு விழாவில் வாங்கி இப்போதுதான் படித்து முடித்தேன்.

எந்தவகை நூல்?


”இதற்கு முன்பு என்னால் எழுதப்பட்ட பல நாவல்களைச் சுக்கு நூறாகக் கிழித்து ஒன்றாகக் குவித்து அதிலிருந்து சில துண்டுகளைப் பொறுக்கி முத்தன் பள்ளம் என்கிற இந்த வரலாற்று நாவலை முடித்திருக்கிறேன்” – என்று இந்நூலாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் இதனை,  வரலாறு என்ற, அந்த ஒரு பார்வையிலேயே அடக்கி விட முடியவில்லை என்பதே உண்மை. நூலினை  நல்ல முறையில் அச்சிட்டு, பார்த்தவுடனேயே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாகவும் வெளியிட்ட மேன்மை பதிப்பகம் பாராட்டுக்குரியது.

தேசாந்திரியின் குறிப்புகள்

இந்தியாவிற்கு, சீனாவிலிருந்து வந்த யுவான்சுவாங் மற்றும் இத்தாலியின் வெனீஸ் நகரிலிருந்து  வந்த மார்க்கோபோலோ என்ற யாத்திரிகர்கள் இருவரும் இந்தியாவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளனர். இவர்களைப் போலவே, இந்த நூலாசிரியரும், ஒரு தேசாந்திரியாக, ஒவ்வொரு நாளும், தான் கண்ட, கேட்ட நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு இந்த நாவலை எழுதி இருக்கிறார் எனலாம். ஏனெனில் அண்டனூர் சுரா அவர்கள் தான் பிறந்து வளர்ந்து பணிபுரியும் கந்தர்வகோட்டை பகுதி மக்களோடு ஒன்றாகக் கலந்து விட்டவர்

ஆண்ட்ராய்டும் போக்கிமானும்

பொதுவாக புதிதாக, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு  பயணம் செய்யும்போது வழியில் உள்ளவர்களை கேட்டுத் தெரிந்து கொண்டோ அல்லது கைகாட்டி பலகைகளின் வழிகாட்டுதலோடு செல்வார்கள். இது ஸ்மார்ட்போன் காலம். அதிலும் ஆண்ட்ராய்டு காலம். எனவே  இந்த நூலின் கதாநாயகன் தனது செல்போனில், ஆண்ட்ராய்டில் உள்ள போக்கிமான் என்ற விளையாட்டை கந்தர்வகோட்டையில் தொடங்கி கூகிள் வழிகாட்ட நடைப்பயணமாக வந்து, தான் எதிர்பாராத முத்தன் பள்ளத்தில் முடிக்கிறான்.

கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கம் > இடுகாடு சாலை > திறக்கப்படாத பேருந்து நிலையம் > அக்கச்சிப்பட்டி > மல்லிகைநத்தம் எனப்படும் பெரியகோட்டை – சொக்கம்பட்டி > ஒட்டப்பாலம் > வேலாடிப்பட்டி > மஞ்சம்பட்டி > வெள்ளாளவிடுதி > வலச்சேரிப்பட்டி > வேளாண்மைப் பண்ணை > கால்ஸ் மதுபானத் தொழிற்சாலை > கல்லாக்கோட்டை > அலும்பில் எனப்பட்ட அம்புக்கோயில் > முத்தன் பள்ளம்  - இதுதான் அந்த வழித்தடம். அவ்வாறு பயணப்பட்டு வரும்போது இடையில் உள்ள ஊர்களின் பெயர்க் காரணம், வரலாறு, ஊர் மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் என்று பலவற்றையும் தனது அனுபவங்களோடு சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

// கண்டராதித்தன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை கண்டவராதித்தன் கோட்டை என அழைக்கப்பட்டு இன்று கந்தர்வகோட்டை என்றாகியிருக்கிறது // (இந்நூல் பக்கம்.19)

// அக்கச்சிப்பட்டி …. …. மன்னன் கண்டவராதித்தன் அக்காவிற்கு சீதனமாகக் கொடுத்த ஊர் என்பதால் அவ்வூருக்கு அப்படியொரு பெயர் ‘அக்கா ஆட்சி பட்டி’ // (இந்நூல் பக்கம்.44)

// வெள்ளாளவிடுதி வேளாண்மைப் பண்ணை … …. கந்தர்வகோட்டை பகுதியில் பொதுவுடமைக் கட்சிகள் ஆழமாகக் காலூன்ற காரணமாக இருந்த பண்ணையாக அது இருந்தது. ஆண்களுக்கு சம்பளம் நூறு, பெண்களுக்கு சம்பளம் இருபது ரூபாய் என ஏற்ற இறக்கத்துடன் இருந்த காலக்கட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கொடுத்த பண்ணை அது. // (இந்நூல் பக்கம்.75)

கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கத்தில் பேசிய பிரபல தலைவர்கள், காந்திசிலை, காந்தி மண்டபம், அம்பேத்கர், இந்திராகாந்தி சிலைகள் அமைய பாடுபட்டவர்கள் பெயர்கள், துப்புரவுப் பணியில் காண்ட்ராக்ட் விட்டு அந்த பணியாளர்களை சுரண்டுபவர்கள், கால்ஸ் மதுபானத் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் – என்று நிறையவே தகவல்கள்.

பதாகை அரசியல்

இந்த நூல் முழுக்க இவர் சுட்டிக்காட்டும் மற்றும் நையாண்டி பண்ணும் ஒரு விஷயம் மக்களிடையே பரவிக் கிடக்கும் ‘ப்ளக்ஸ் பேனர்’ எனப்படும் விளம்பர மோகம்தான். இந்த ப்ளக்ஸ் பேனரை இப்போதெல்லாம் பதாகை என்று என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். இவரும் மற்றவர்களைப் போலவே ‘ப்ளக்ஸ் பேனரை பதாகை என்ற அர்த்தத்திலேயே சொல்லி இருக்கிறார்.

// ஒரு பதாகை காமராசரை நாடாராக்கி யிருந்தது. இன்னொன்று பெரியாரை நாயக்கராகக் காட்டியது. இதைவிடவும் ஒரு பதாகை புதிதாக நிறுத்தப் பட்டிருந்தது. தேவேந்திரகுல வேளாளர் என்கிற பதாகை அது. அதில் தேவநேயப் பாவாணரின் கம்பீரம் தெறிக்கும் மீசையுடன் பழனி முருகனும் இருந்தார்கள். இப்பதாகை பலரும் கவனிக்கும் படியாக இருந்தது. // (இந்நூல் பக்கம்.26)

// என்ன சண்டை …. எவனாவது மண்டபத்தில் தேவை வைப்பான். இவன்க ப்ளெக்ஸ்ல உன் பேரப் போடலை, என் பேரப் போடலைனு அடிச்சிக்கிறுவான்க. …. இவன்களெ வெட்டிக் கொத்தி ஆக்கி படைக்கணும். // (இந்நூல் பக்கம்.63)

இந்நூலில் வழியில் காணும் சிமெண்டால் ஆன விளம்பரப் பலகைகளையும் பதாகைகள் என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார் 

(பதாகை என்றால் எனக்கு அந்தக்கால ராஜாராணி, புராணக் கதை திரைப்படங்களிலும், இக்கால கோயில் திருவிழாக்களிலும் ஊர்வலத்தின் முன்னால் தூக்கி வரப்படும் துணியால் ஆனவையே நினைவுக்கு வரும். ‘“தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி” – என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்லுகிறது))

கதைக்குள் கதை

அந்த காலத்து விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள் ஆகியவற்றில் கதைக்குள் கதைகளாக நிறையவே கதைகள் வரும். அதனைப் போலவே இந்த நாவலிலும்,  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து முத்தன் பள்ளத்திற்கு குடியேறிய பாட்டன் கதை உருவாகி இடையிடையே முத்தரையர்கள், தொண்டைமான்கள் மற்றும் குடிமக்களின் சமூகநிலை பற்றிய சுவையான செய்திகள் சொல்லப்படுகின்றன. 

அம்புநாட்டில் அறுத்துக்கட்டும் பழக்கம் அதாவது விதவை மறுமணத்திற்கு தடை. மீறுபவர்களுக்கு தண்டனை இந்த தடையை மீறிய ஒரு ஜோடிக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும் நேர்ந்த கொடுமைகளையும் ஓரிடத்து சொல்லக் காணலாம்.

காதலுக்காக மன்னர் அல்லது பிரபு  பட்டத்தையும் அதிகாரத்தையும் துறந்தவர்கள் பற்றிய வரலாற்றினை இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் கேள்விப்பட்டது உண்டு. இதேபோன்று, ஆஸ்திரேலிய பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட, புதுக்கோட்டை சமஸ்தானத்து ராஜ மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், அந்த பெண்ணுக்காக மன்னர் பட்டத்தையும், உறவுகளையும், ஜாதி பட்டத்தையும் துறந்து இருக்கிறார். இதனை ஒரு சிறுகதை போல இங்கே அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
   
// கல்லாக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஒன்று இருக்கிறது. தொண்டைமான் காலத்து மாரியம்மன் கோயில் அது. அக்கோயிலுக்குள் சாதி மதம் கடந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் அதிகாரத்தை புதுக்கோட்டை சமஸ்தானம் கொடுத்திருந்தது. தலித் மக்கள் ஜமீன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனையும், அக்கோயிலும் சேரி மக்களால் கட்டப்பட்டதால் அரண்மனைக்குள் நுழைந்து மன்னனை சந்திக்கும் அதிகாரமும், கோயிலுக்குள் நுழையும் உரிமையும் அவர்களுக்கு கிடைத்திருந்தன //  (இந்நூல் பக்கங்கள் .87 - 88)

( இந்த நூலின் பல இடங்களில் கள்ளர், தொண்டைமான், முத்தரையர் என்று குறிப்பிடும் நூலாசிரியர், மேலே சொன்ன தகவலில் தலித், சேரிமக்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டதற்குப் பதிலாக, இன்ன பிரிவினர் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தால், பின்னாளில் அம்மக்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுபவர்களுக்கு துணையாக இருக்கும் )

முத்தன் பள்ளம் என்ற ஊர்

இந்த ஊரைப் பற்றிய பதிவுகளை, இந்நூலின் இரண்டாம் பகுதியினுள்,ஒரு வண்டித்தடம் அளவிற்கே உள்ள பாதை, பாம்புகள் நெளியும் தண்ணீர்க்காடு மற்றும் இருபுறமும் காட்டுவேலி, இந்த பாதையைக் கடக்கும் வரை அவ்வூர் பள்ளிச் சிறுவர், சிறுமியர் படும்பாடு, பாம்பு கடித்தவரை மந்திரிப்பதற்காக, கயிற்றுக் கட்டிலில் தூக்கிச் செல்லும் அவ்வூர் மக்கள் – என்று சொல்லோவியங்களாக செதுக்கியுள்ளார்.. கூடவே பாட்டன் முத்தாயி காதல் கதை.

இந்த நாவலைப் படிக்கையில் நானும் இண்டர்நெட்டில் இந்த பாதையை விக்கிமேப்பில் (Wikimapia) தொடர்ந்து வந்தேன். நூலில் குறிப்பிடப்படும் பல ஊர்கள் அந்த விக்கிமேப்பில் குறிக்கப்பட வில்லை.. எனவே அந்தந்த ஊர் ஆர்வலர்கள் தங்கள் ஊர் பெயர்களை விக்கிமேப்பியாவில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள் வெளியிட்ட கிராமப் பெயர்களிலும் முத்தன் பள்ளம் பற்றி ஒரு செய்தியும் இல்லை. கந்தர்வகோட்டை பகுதியையைச் சேர்ந்த எனது உறவினர், இந்த ஊருக்கு கல்லாங்கோட்டைக்கு சென்று அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ளடங்கிய இந்த ஊருக்கு நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ செல்ல வேண்டும்: பஸ் வசதி அதிகம் இல்லை என்றார்.

எனக்குத் தெரிந்து ’முத்தன் பள்ளம்’ போன்ற கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை. ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளும் பணிபுரியும் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் மனசாட்சியுடன் நடந்து கொண்டாலேயே நிறைய பிரச்சினைகள் தீர்ந்து விடும்

நூலின் பெயர்: முத்தன் பள்ளம்  / வகை: நாவல்
ஆசிரியர்:  அண்டனூர் சுரா

நூலின் விலை: ரூ 150  பக்கங்கள்: 212

பதிப்பகம்: மேன்மை வெளியீடு, 5/2 பெர்தோ தெரு, இராயப்பேட்டை, வி.எம்.தெரு,(கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்) சென்னை 600014 தொலைபேசி: 044 2847 2058


தொடர்புடைய எனது பிற பதிவு:
 

Friday, 6 October 2017

ஆகமவிதிகள் பற்றிய சர்ச்சைஇப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும், ஜனவரி முதல்நாள் அவரவர் கும்பிடும் அல்லது இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபடுவது, ஒருவருக்கொருவர் “HAPPY NEW YEAR” – என்று, புத்தாண்டு வாழ்த்து கூறிக் கொள்வது – ஆகியவை மக்கள் மனதில் ஒன்றி விட்டது. எனவே வருடத்தின் தொடக்கம் ஒரு இறைவழிபாடுடன் துவங்க நினைப்பதில் தப்பில்லை. ஏனெனில் ஆங்கில நாட்காட்டியின் படியே நிறைய காரியங்களைச் செய்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் ”ஆங்கிலப்  புத்தாண்டு வழிபாட்டுக்காக  ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது .மீறித் திறந்தால், அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம்  நடத்துவோம்’ – என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாதிரியோ, ஆகமவிதிகளை மீறி அர்ச்சனை செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்த மாதிரியோ தெரியவில்லை..

ஞாயிற்றுக்கிழமைக்கு (இதுவும் பைபிள் அடிப்படையில் ஆங்கிலேயர் சொன்ன வார விடுமுறை நாள்) என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. மேலும், இந்த கனம் கோர்ட்டார் தீர்ப்பு என்பது, அர்ச்சகருக்கான நியமனத்தில் ஆகமவிதிகளைப் பற்றி சொல்லும்போது,  “முன்னால் இருந்து பார்த்தால் முதலியார் குதிரை; பின்னால் இருந்து பார்த்தால் செட்டியார் குதிரை” என்பது போல இருக்கிறது.

இவை ஆகம விதிகளா?

இந்துமதத்தில் ஆகம விதிகள் என்று ஏதேனும் நூல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. தெரிந்த நண்பர்களிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்கிறார்கள். வேதத்தில் சொல்லி இருக்கு என்று சொல்லிச் சொல்லியே, வேத புத்தகத்தையே பார்க்காத கதையாக இருக்கிறது.. எதற்கெடுத்தாலும் ஆகமவிதிகள் என்று மேற்கோள் காட்டுபவர்கள் கீழ்க்கண்ட கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எந்த ஆகமவிதிகளின் கீழ் நடைமுறையில் உள்ளன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

கோயிலில் எந்த இடத்தில் விளக்குகள் எரிந்தாலும் , அவை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றித்தான் எரிய வைக்க வேண்டும் என்பார்கள். இப்போது ஆன்மீகம் பற்றி வாராவாரம் எழுதும் பத்திரிகைகளில் இதனை ரொம்பவும் சிரத்தையாக சொல்லி இருப்பார்கள். பக்கத்திலேயே தீப எண்ணெய்க்கான விளம்பரமும் இருக்கும். அந்த காலத்தில் வெளிச்சத்திற்காக ஏற்றப்பட்ட தீப்பந்தங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி இருக்க இப்போது கோயில் முழுக்க டியூப்லைட் போன்ற மின்விளக்குகள்தான் இருக்கின்றன. கோயிலில் விஷேசம் என்றால் அலங்கார வண்ண விளக்குகள்தான்.

அப்புறம் இந்த கழிப்பிடம் சமாச்சாரம். உச்சி மீது கோயில் இருந்தாலும், அங்கேயும் மற்றும் எல்லாக் கோயில்களிலும் கட்டணக் கழிப்பிடங்கள்தான். இவை எந்த ஆகம விதிகளின் கீழ் இருக்கின்றன என்று தெரியவில்லை. (அவசரத்திற்கு இவை கட்டாயம் தேவைதான் என்பதிலும், கால மாறுதலுக்கு ஏற்ப வசதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை:)

சாதா தரினம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல். அதிலும் கட்டணம் இல்லாத V.I.P என்று மட்டும் அல்லாமல் V.V.I.P என்று ஒரு சிறப்புப் பிரிவு வேறு உண்டு. இறைவன் முன் அனைவரும் சமம் என்ற சித்தாந்தம் உடைபட்டு போகிறது.

இதேபோல் கோயிலில் படம் எடுக்கக் கூடாது என்று சில இடங்களில் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் சரியாகச் சொல்வதில்லை. ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கருவறையை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் பல பத்திரிகைகளில் அவர்கள் செல்வாக்கில் சில கோயில்களின் கருவறைப் படங்கள் வெளிவந்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இப்போது, “ திருப்பதி லட்டுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது “ என்ற செய்தி வந்துள்ளது. .

இதற்கெல்லாம் மேலாக, இறைவன் சன்னிதானத்தில் மேளம் கொட்டுதல், பாட்டு பாடுதல் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது  என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களாலேயே நிகழ்வுறும். ஆனால் இப்போதோ பதிவு செய்யப்பட்ட மேள சத்தத்தை, அர்ச்சனை மணி ஓசையை கோயில்களில் ஒலி பரப்புகிறார்கள்.

எனவே, இதேபோல அர்ச்சகர் நியமனத்திலும், காலத்திற்கு ஏற்ப மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் பிராமணர்கள் செல்வாக்கு இழந்தமை:

கல்லூரியில், முதுகலையில் நான் படித்த சைவ சித்தாந்த நூல்களில் இன்ன ஜாதியார்தான் கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று, சொல்லப்பட்டு நான் படித்ததாக நினைவில்லை. மேலும் அவை இறைவனை வணங்குவது பற்றியும், இறையடியார்கள் பெருமை பற்றியுமே அவை பேசுகின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்று சொல்லும் கருத்துக்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. (கீழே காண்க)

/// தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை. தமிழகத்தில் சமய வளர்ச்சியும், வேதப்பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பல தரப்பட்டதுறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக்கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும்.

ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும்
தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும்,
மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும்
அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்கு வதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும், பொருளையும், குடியுரிமைகளையும் வாரி
வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு
விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகா சபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின்
நிருவாகத்துக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.

உள நிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மிக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ்மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குலவேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்விக்கும் தமிழன் ஒருவன், தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பிராமணர்களின் பின்னின்று கோயில்‘பிரசாதங்களைப்’ பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ்ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர் பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள். ///  - (டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியீடு, பக்கம் 316 - 317)

மேலே சொல்லப்பட்ட மேற்கோளில் இன்றைய சூழலில் யார் தமிழ் பிராமணர்கள் அல்லது யார் அயல்நாட்டு பிராமணர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். அன்று முதல்.அர்ச்சகர்கள் பிராமணர்களாகவே, நியமிக்கப்பட்டு வருவது கண்கூடு. தமிழ் மேட்ரிமோனியலில் (Tamil Matrimony) தமிழ் பிராமின் என்று விளம்பரம் வருவதை அனைவரும் பார்த்து இருக்கலாம். எனவே தமிழரான பிராமணர்கள், தெலுங்கு வம்ச சோழர்களின் ஆட்சி சூழல் மாறலுக்கு ஏற்ப, அவர்கள், தங்கள் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டு விட்டனர் எனலாம்.

திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் வைத்து போற்றப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரம், தனது பாயிரத்தில்,  ஆகமச் சிறப்பு பற்றி பத்து
பாடல்களில் பேசுகிறது. அப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சுருக்கமான கருத்துக்கள் இவை.

1. சிவன் 28 ஆகமகங்களை 66 பேருக்கு உபதேசித்தான்.
2. இந்த ஆகமகங்களின் (அதாவது கிரந்தங்களின்) எண்ணிக்கை              இருபத்தெட்டு கோடி நூறாயிரம்; இந்த ஆகமகங்கள் துணையுடன் விண்ணவர்கள் ஈசனது பெருமையைச் சொன்னார்கள்.
3. பதினெட்டு மொழிகளும் தெரிந்த பண்டிதர்கள் இந்த ஆகமங்கள் கூறும் வகையை அறிவார்கள்.
4. இந்த ஆகமங்கள் அனுபவத்தால் மட்டுமே விளங்கக் கூடியவை.
5. சிவனே ஆகமத்தில் அறிவாய் விளங்குகிறான்.
6. இந்த ஆகமகங்களை சிவனிடமிருந்து பெற்றவர்களுள் நந்தியும் ஒருவன்.
7. அப்படி நந்தி பெற்ற ஆகமங்கள் ஒன்பது.
8. இந்த ஆகமப் பொருளை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.
9. சிவன் இந்த ஆகமகங்களை உமாதேவிக்கு ஆரியம் (வடமொழி) மற்றும் தமிழ் இரண்டிலும் உபதேசித்தான்.
10. ஆனாலும் சிவனை ஆகம அறிவினால் மட்டும் அறிய முடியாது. (மேலே எண் எட்டில் சொல்லப்பட்ட கருத்தை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்)

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
-          (திருமந்திரம். 58)

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-          (திருமந்திரம் – 65)

எனவே திருமூலர் கருத்துப்படி பார்த்தாலும், எவையெவை ஆகம விதிகள் என்று நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை. திருமூலர் சொல்லும் இதோபதேசப் பாடல் ஒன்று இங்கே …

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.
-          (திருமந்திரம் 2014)

மக்கள் மனநிலை:

இந்தியாவில் பல விஷயங்கள் ஜாதி அபிமான அடிப்படையிலேயே இன்னமும் இருப்பது கண்கூடு. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், வருடா வருடம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையின் போது அங்கு வேலை பார்க்கும் ஒரு பிராமணர் ஒருவர்தான் பூஜை புனஷ்காரம் செய்வார். அவரும் அதனை விருப்பத்துடன், கர்ம சிரத்தையாக, பயபக்தியோடு செய்வார். அவரைத்தான் மற்றவர்களும் பூஜை காரியங்கள் செய்யச் சொல்லுவார்கள். மற்றவர்கள் யாரும் அந்த பூஜை செய்ய முன்வருவதும் இல்லை. இஷ்டப்படுவதும் கிடையாது.

எனவே இந்த நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒருவேளை தீர்ப்பு ஆனாலும், கூட நடைமுறையில் என்ன நடக்கும் என்பது கண்கூடு. (வெளியே பகுத்தறிவு பேசும் பலரும், தங்கள் வீட்டு கல்யாணம் கிரகப் பிரவேச நிகழ்ச்சிகளுக்கு பிராமணர்களை வைத்தே செய்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட அல்லது குடும்பம் சார்ந்த விருப்பம். ஆனால் அவர்களே வெளியில் பிராமணர்களை பகுத்தறிவு என்ற பெயரில் திட்டுவதை என்னவென்று சொல்வது?)
 
( சென்ற ஆண்டு ஜனவரி (2016) முதல் வாரத்தில் எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது வெளியிட முடியவில்லை. பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளேன்)