Tuesday 30 June 2015

கட்டாய ஹெல்மெட் – எதிர்ப்பு ஏன்?



பைக்கிலோ, ஸ்கூட்டரிலோ அல்லது மொபெட்டிலோ செல்கிறோம்.
ஒரு சின்ன விபத்து ஏற்படுகிறது. தலையைத் தவிர உடலின் ஏதோ ஒரு இடத்தில் சிறுகாயம். அந்த சிறு காயத்தால் ஏற்படும் வலி (ரண வலி) சொல்ல முடியாதது. அதே காயம் தலையில் ஏற்பட்டால்? உயிருக்கும் ஆபத்துதான். சுருக்கமாகச் சொன்னால் தலைக்காயம் சீரியஸ்தான். இதற்காகவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை கட்டாயமாக ஹெல்மெட் அணியச் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது தெரியும். இருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள்?  

சில அசவுகரியங்கள்:

முதல் குறை இதன் வடிவமைப்பு. ஹெல்மெட் தேவைதான். ஆனாலும் இதனை தலையில் போட்டுக் கொண்டவுடன் பின்னால் வரும் வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை; அடிக்கடி வியூ மிரரில் (VIEW MIRROR) பார்த்துக் கொண்டே ஓட்ட வேண்டி உள்ளது.

காதுகளில் நமக்கு நாமே பஞ்சை வைத்துக் கொண்டது போன்ற உணர்வு. நம்நாட்டில் பலபேர் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதில்லை. அவற்றுள் ஒன்று, இடது பக்கமாக வேகமாக வந்து நம்மை ஓவர்டேக் செய்வது. அந்த ஆசாமி வேகமாக வருவது, ஹெல்மெட் அணிந்த நமக்கு அவர் கடந்த பிறகுதான் தெரியும்.

ஹெல்மெட் அணிபவர் மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால் அடையும் சிரமங்களை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

சில இடங்களில் நாம் அடிக்கடி வண்டி நிறுத்தும் இடங்களில் ஹெல்மெட்டிற்கும் காசு கேட்கின்றனர். எப்போதோ ஒருதடவை என்றால் பரவாயில்லை. தினமும் அலுவல் காரணமாக பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வண்டியை விட்டுச் செல்பவர்கள், ஹெல்மெட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கொடுக்க வேண்டி வரும்.

எனது அனுபவம்:

நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. மளிகை சாமான் தவிர மற்ற பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அருகிலுள்ள டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். வண்டியில் டவுனுக்கு   அடிக்கடி செல்ல வேண்டி இருப்பதால் (முன்பு சைக்கிள்) எல்லோருடைய வீட்டிலும்  பைக்கோ, ஸ்கூட்டரோ அல்லது மொபெட்டோ இருக்கும். ஒவ்வொரு முறையும் தயிர் வாங்க, பால் வாங்க என்று செல்லும்போது ஹெல்மெட்டை மறக்காமல்  போட்டுச் செல்ல வேண்டும். சிலசமயம் மறந்து விட்டால் போலீஸ்காரர் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்ற பதற்றம்தான் மிஞ்சும். (நான் டவுனுக்கு எனது மொபெட்டில் எப்போது சென்றாலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் செல்வேன். (இப்போது டவுனுக்கு வண்டியில் செல்வதில்லை)

என்னைப் போன்ற சீனியர் சிட்டிசன்கள் அடுத்த தெருவில் இருக்கும் டாக்டரைப் பார்க்க ஸ்கூட்டி, ஸ்கூட்டர், மொபெட் போன்ற வண்டிகளைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.  பெரும்பாலும் அதிக வேகம் இல்லை. (சைக்கிள் ஓட்டும் பையன் ஓவர்டேக் செய்து விடும் வேகம்தான்) சீனியர் சிட்டிசன்களுக்கு ஹெல்மெட் என்பது குருவித் தலையில் பனங்காய் என்பது போல. அதிலும் குறிப்பிட்ட வயதுவரைதான் வண்டி ஓட்ட முடியும். அப்புறம் தானாகவே நிறுத்தி விடுவார்கள். இதில் இருசக்கர வாகனத்தில் செல்லாத போது, ஆட்டோவுக்கு கொடுக்கும் காசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.


போலீஸும் சட்டமும்:

பொதுவாகவே எந்த ஒரு சட்டமும் பாரபட்சமின்றி கடை பிடிக்கப்பட்டால் அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். (ஹெல்மெட் விஷயத்தில் சீக்கியர்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது ) மற்ற சட்டங்களைக் காட்டிலும் இந்த ஹெல்மெட் சட்டத்தின்மீது போலீசார் காட்டும் அக்கறை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் நடைமுறையில், ஹெல்மெட் போடாமல் செல்லும் சிலரை போலீஸ் கண்டு கொள்வதே இல்லை. குறிப்பாக சாதாரண நடுத்தர மக்கள்தான் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் பாதிக்கப் படுகிறார்கள். ஆட்டோ கட்டணம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீட்டர் போடாமல் ஓடும் ஆட்டோக்களை என்ன செய்ய முடியும். அவர்களுக்கென்று சங்கங்கள் உண்டு. ஆனால் இருசக்கர வானம் ஓட்டுபவர்களுக்கு என்று எந்த சங்கமும் கிடையாது.

கட்டாய ஹெல்மெட்: போலீசாரின் கெடுபிடிகள் தேவையற்றது.
http://tthamizhelango.blogspot.com/2012/02/blog-post_01.html  என்ற பதிவினில் நான் எழுதியது.

// நமது நாட்டில் தொட்டதெற்கெல்லாம் இரு சக்கர வண்டியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளி கல்லூரி அழைத்துச் செல்ல, அலுவலகம் செல்ல , அவசர பொருட்கள் வாங்க என்று எல்லாவற்றிற்கும் தேவைப் படுகிறது. நமது நாட்டில் பஸ் கட்டணத்தையும் கும்பலையும் பார்த்தால் பயணம் செய்ய யோசிக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் சென்று வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிடுகிறது. பஸ் வசதியும் அடிக்கடி கிடையாது. இரு சக்கர வண்டியை எடுத்தால் ஹெல்மெட் போட்டாயா என்று கேள்வி. ஹெல்மெட் போடுவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

வெளியூர் பயணத்திற்கு செல்லும் முன் இரு சக்கர வண்டிகளை ஸ்டாண்டில் விடும்போது ஹெல்மெட்டைப் பத்திரப் படுத்துவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது. சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட் வைக்க தனி கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டை வைக்க அனுமதிப்பதில்லை. வண்டியை வைத்துவிட்டு கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்கிறார்கள். பிச்சைப் பாத்திரம் போன்று எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  ஹெல்மெட் அணிவதால் பின்பக்கம் வரும் வண்டிகளின் சத்தம் கேட்பதில்லை. பலருக்கு ஹெல்மெட் அணிவதால் தலை சுற்றல், முடி உதிர்தல், தலை அரிப்பு போன்ற பிரச்சினைகள். இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிவதால் உண்டாகும் சங்கடங்கள் சொல்லவே முடியாது. அவ்வளவு கஷ்டம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? ஹெல்மெட் அணிந்தவர்களே விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை செய்திகளாக பார்க்கிறோம். இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு  உருவாகியுள்ளனர். //
  
விபத்துக்கு காரணங்கள் பல இருக்கின்றன. குடித்து விட்டு ஓட்டுவது; எதிர்திசையில் வருவது; அதி வேகம் என்று பல காரணங்கள். (அதிவேக பைக்குகளின் உற்பத்திக்கும் விளம்பரத்திற்கும் தடை போட வேண்டும். செய்வீர்களா?) எனவே ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு இல்லை என்று சட்டம் கொண்டு வரலாம். (இதிலும் சில ஆசாமிகள் காசு பார்த்து விடுவார்கள், என்பது வேறு விஷயம்)  

இப்போது புதிதாக ஹெல்மெட் வாங்கி ரசீதை காட்ட வேண்டுமாம்; ஏற்கனவே வாங்கிய ஹெல்மெட்டை என்ன செய்வது? இதில் சட்டம் யாருடைய நலனுக்கு என்பது வெளிப்படை.  எனவே ஹெல்மெட்  அணிய வேண்டுமா இல்லையா என்பதை அவரவர் தேர்விற்கு விட்டு விடலாம். கட்டாயப்படுத்தி கண்ட இடங்களில் நிறுத்தி வசூல் வேட்டை செய்ய வேண்டியதில்லை.  


40 comments:

  1. அவசர வேலைக்கு என்ன செய்வது என்று குழப்பம் தான்...! சைக்கிளை எடுத்து 'தயார்' செய்து வைத்து விட்டேன்...!

    ReplyDelete
  2. "இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு உருவாகியுள்ளனர். "

    Point to be noted sir,

    சரியான பதிவு.

    God Bless You

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் தேவையான பதிவு. எனக்கு இந்த பிரச்சனை இல்லை. ஒன்று நடை அல்லது சைக்கிள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // அவசர வேலைக்கு என்ன செய்வது என்று குழப்பம் தான்...! சைக்கிளை எடுத்து 'தயார்' செய்து வைத்து விட்டேன்...! //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்காவது சைக்கிள் இருக்கிறது. என்னால் முன்புபோல் உங்களைப் போல சைக்கிள் ஓட்ட இயலாது. ஆட்டோவிற்கு கொடுத்தும் கட்டுப்படி ஆகாது. பார்ப்போம்.

    ReplyDelete
  5. மறுமொழி > வெட்டிப்பேச்சு said...

    // "இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு உருவாகியுள்ளனர். " Point to be noted sir, சரியான பதிவு. God Bless You //

    அய்யா வேதாந்தி அவர்களின் சூடான பாராட்டுரைக்கும், மன நிறைவான இறை ஆசிக்கும் நன்றி.

    ReplyDelete
  6. எனக்கு வண்டி இல்லாமல் வேலை இல்லை! ஹெல்மெட் இருக்கிறது! ஆனால் அதை அணிந்தால் அசகவுரியமாக உணர்கிறேன்! இன்று வரை ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டி சமாளித்துவிட்டேன்! நாளைக்கு?! தெரியவில்லை! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
  7. பெரும்பாலான பெண்கள் கொண்டை வைத்து உள்ளனர். அவர்கள் எப்படி ஹெல்மெட் போடா முடியும். சீக்கியர்களுக்கு விதி விலக்கு கொண்டை போடுவதால் தரப்பட்டு உள்ளது. அது பெண்களுக்கும் தரப்பட வேண்டும்.
    ஏற்கனவே வைத்துள்ள ஹெல்மெட் பில் இல்லாவிடில் என்ன செய்வது என்று சட்டம் தெளிவாக சொல்ல வேண்டும். தெளிவில்லாத சட்டங்களை போலீஸ் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்த முடியும்.

    ReplyDelete
  8. முன்னூறு ரூபாய் ஃபைன் என்றால் நூறு ரூபாய் கையூட்டு கொடுத்துத் தப்பித்து லஞ்சத்துக்கு வழிவகுக் கிறோமே. மேலை நாட்டில் சைக்கிள் ஓட்டவும் ஹெல்மெட் அணிய வேண்டுமாம் சட்டம் பரவலாக கடைப்பிடீகப்பட வேண்டும்

    ReplyDelete
  9. அன்றாடம் ஹெல்மெட் அணிவதில் உள்ள சாதக பாதகங்களை நன்றாகவே அலசியுள்ளீர்கள். கஷ்டம்தான். என்ன செய்வது? பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    ReplyDelete
  10. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    // எனக்கு வண்டி இல்லாமல் வேலை இல்லை! ஹெல்மெட் இருக்கிறது! ஆனால் அதை அணிந்தால் அசகவுரியமாக உணர்கிறேன்! இன்று வரை ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டி சமாளித்துவிட்டேன்! நாளைக்கு?! தெரியவில்லை! நல்லதொரு பதிவு! நன்றி! //

    உங்களுக்கு மட்டுமல்ல, நண்பரே, பலருக்கும் இதே பிரச்சினைதான். கருத்துரை தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி > Anonymous said... ( 1 )

    // பெரும்பாலான பெண்கள் கொண்டை வைத்து உள்ளனர். அவர்கள் எப்படி ஹெல்மெட் போடா முடியும். சீக்கியர்களுக்கு விதி விலக்கு கொண்டை போடுவதால் தரப்பட்டு உள்ளது. அது பெண்களுக்கும் தரப்பட வேண்டும். //

    நம் நாட்டில் மதத்தின் அடிப்படையில் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    // ஏற்கனவே வைத்துள்ள ஹெல்மெட் பில் இல்லாவிடில் என்ன செய்வது என்று சட்டம் தெளிவாக சொல்ல வேண்டும். தெளிவில்லாத சட்டங்களை போலீஸ் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்த முடியும்.//

    ஆமாம் அனானிமஸ் அவர்களே. நான் இப்போது வைத்திருக்கும், ISI முத்திரை உள்ள பழைய ஹெல்மெட்டை என்ன செய்வது?

    ReplyDelete
  12. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // முன்னூறு ரூபாய் ஃபைன் என்றால் நூறு ரூபாய் கையூட்டு கொடுத்துத் தப்பித்து லஞ்சத்துக்கு வழிவகுக் கிறோமே. மேலை நாட்டில் சைக்கிள் ஓட்டவும் ஹெல்மெட் அணிய வேண்டுமாம் சட்டம் பரவலாக கடைப்பிடீகப்பட வேண்டும் //

    ஆமாம் அய்யா! கடை பிடிப்பதில் மேலைநாட்டு சட்ட திட்டங்களுக்கும், நம்நாட்டு சட்ட திட்டங்களுக்கும் நிறையவே பாகுபாடு உண்டு அய்யா. G.M B அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அன்றாடம் ஹெல்மெட் அணிவதில் உள்ள சாதக பாதகங்களை நன்றாகவே அலசியுள்ளீர்கள். கஷ்டம்தான். என்ன செய்வது? பகிர்வுக்கு நன்றிகள், சார். //

    எது எப்படி இருப்பினும் தலைக்கவசம் தேவைதான் அய்யா. இருந்தாலும் கட்டாயம் என்ற பெயரில் , அன்றாட வாழ்க்கையை சட்டத்தின் பெயரால் ஸ்தம்பிக்க வைப்பதையே எல்லோரும் எதிர்க்கிறார்கள். அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை
    நிறுத்தும் நிலையில்தான்
    நானும்.அதிகம் நடை அல்லது பஸ்ஸைத்தான்
    பயன்படுத்துகிறேன்
    இந்தச் சட்டம் கொஞ்சம் அசௌகைரியம்தான்

    ReplyDelete
  15. மறுமொழி சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    // சரியான நேரத்தில் தேவையான பதிவு. எனக்கு இந்த பிரச்சனை இல்லை. ஒன்று நடை அல்லது சைக்கிள். பகிர்வுக்கு நன்றி. //

    முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கடந்த மூன்று நாட்களாக (ரொம்பநாள் கழித்து) ஹெல்மெட் போட்டுக் கொண்டு, வெயிலில், (இத்தனைக்கும் இரண்டு முறைதான்) மொபெட்டில் சென்று வந்ததில் நேற்றிலிருந்து ஒரே தலைவலி. அதன் எதிரொலிதான் இந்த பதிவு அய்யா. நானும் உங்களைப் போல நடராஜா சர்வீசுக்கு மாறிவிடலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  16. எங்க நாட்டுல கால காலமா ஹெல்மட் போட்டு தான் வண்டி ஒட்டுறம். யாருக்குமே நீங்க சொல்ற எந்த விசயமும் கஷ்டமா தெரியல. இந்தியா ல மட்டும் ஏன் எல்லாரும் கஷ்டம் கஷ்டம் எண்டு சொல்றிங்க. ஆளுக்கு ஒன்னு வாங்கி போட்டுகிட்டா என்ன குரஞ்சிட போவுது, எனக்கென்னமோ இது பெரிய பிரச்சனையா தெரியல.

    ReplyDelete
  17. அலுவலகம் தவிர மற்ற நேரங்களில் முடிந்த வரைக்கும் நட ராஜா தான்.

    ReplyDelete
  18. தலைக் கவசம் உயிர் கவசம் என்பதில் ஐயமில்லை
    ஆனாலும், அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு
    சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதே என் கருத்தாகும்
    பொது இடங்களுக்குச் செல்லும் போதும்,வங்கிகளுக்குச் செல்லும் பொழுதும் அல்லது அலுவலகங்களுக்குச் சென்றாலோ தலைக் கவசத்தினை வைப்பதற்கு உரியஏற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் அமல்படுத்த வேண்டும்.
    Open face Helmet மற்றும் Ladies Helmetகளை வண்டியில் வைத்து பூட்ட இயலாது
    இதுபோன்ற தருணங்களில் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டானசூழல் எழுகிறது
    தம +1

    ReplyDelete
  19. எல்மெட்டு கட்டாயம் போடோணுமுங்க!
    நானு போடாம வண்டி ஓட்டினதே இல்லீங்க!
    த ம கூட ஒண்ணு!

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா,
    தலைக்கவசம் அணிவதால் எந்த உடல் தொந்தரவும் இல்லை என்று கூறுகிறார்கள்,
    ஆனால் எங்கு வைப்பது என்ற நிலை சரிசெய்யனும்,
    நல்ல பகிர்வு
    நன்றி.

    ReplyDelete
  21. அவனவன் உயிரை அவனவன் பார்த்துக்க மாட்டானா ,எதுக்கு ஹெல்மெட் :)

    ReplyDelete
  22. மறுமொழி > Ramani S said...

    // இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்தும் நிலையில்தான்
    நானும்.அதிகம் நடை அல்லது பஸ்ஸைத்தான் பயன்படுத்துகிறேன் . இந்தச் சட்டம் கொஞ்சம் அசௌகைரியம்தான்
    tha.ma 5 //

    கவிஞர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. நானும் உங்கள் வழியையே பின்பற்றலாம் என்று நினைக்கிறேன். இரு சக்கர வண்டியில் சென்றால் ஒரே நாளில் பல வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம்; இனிமேல் அப்படி முடியாது.

    ReplyDelete
  23. மறுமொழி > HajasreeN said...

    // எங்க நாட்டுல கால காலமா ஹெல்மட் போட்டு தான் வண்டி ஒட்டுறம். யாருக்குமே நீங்க சொல்ற எந்த விசயமும் கஷ்டமா தெரியல. இந்தியா ல மட்டும் ஏன் எல்லாரும் கஷ்டம் கஷ்டம் எண்டு சொல்றிங்க. ஆளுக்கு ஒன்னு வாங்கி போட்டுகிட்டா என்ன குரஞ்சிட போவுது, எனக்கென்னமோ இது பெரிய பிரச்சனையா தெரியல. //

    சகோதரர் Hajasree.N அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பிரச்சினை என்ன வென்றால், ஹெல்மெட்டைப் பொறுத்தவரை, எங்கள் நாட்டில் நினைத்தால் திடீரென்று சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்; சிலசமயம் கண்டு கொள்ல மாட்டார்கள். மேலும் இங்குள்ளவர்களில் பலர் சாலை விதிகளை கடைபிடிப்பதில்லை; இவர்களால் ஹெல்மெட் போட்டுக் கொண்டு இந்திய சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் சிரமமே. நீங்கள் ஒருமுறை இங்குவந்து ஹெல்மெட் போட்டு ஒரு இருசக்கர வண்டியை ஓட்டிப் பாருங்கள்.

    ReplyDelete
  24. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // அலுவலகம் தவிர மற்ற நேரங்களில் முடிந்த வரைக்கும் நட ராஜா தான். //

    எல்லோருமே இப்படி நடராஜா சர்வீஸ் பக்கம் சென்று விட்டால், இருசக்கர வண்டிகள் விற்பனை சரிந்து விடும்; மெக்கானிக்குகளுக்கும் வேலை குறைந்து விடும் போலிருக்கிறது. சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // தலைக் கவசம் உயிர் கவசம் என்பதில் ஐயமில்லை
    ஆனாலும், அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதே என் கருத்தாகும் //

    ஆமாம் ஆசிரியர் அவர்களே. இந்தியாவில் பல நல்ல சட்டங்கள் தவறான முறையில் கையாளப்படுகின்றன என்பதற்கு, இந்த ஹெல்மெட் சட்டம் ஒன்றே உதாரணம்.

    // பொது இடங்களுக்குச் செல்லும் போதும்,வங்கிகளுக்குச் செல்லும் பொழுதும் அல்லது அலுவலகங்களுக்குச் சென்றாலோ தலைக் கவசத்தினை வைப்பதற்கு உரியஏற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் அமல்படுத்த வேண்டும். Open face Helmet மற்றும் Ladies Helmetகளை வண்டியில் வைத்து பூட்ட இயலாது
    இதுபோன்ற தருணங்களில் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டானசூழல் எழுகிறதது தம +1 //

    எங்கேயும், எப்போதும் சிரமம்தான். ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி > குட்டன் said...

    // எல்மெட்டு கட்டாயம் போடோணுமுங்க!
    நானு போடாம வண்டி ஓட்டினதே இல்லீங்க!
    த ம கூட ஒண்ணு! //

    நானும் நகர்ப்புறத்தில், ஹெல்மெட் போட்டுத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன். இப்போது ஹெல்மெட் போட்டால் வரும் தலைவலியைக் கருத்தில் கொண்டு இருசக்கர வண்டியை அதிகம் எடுப்பதில்லை. ஆனாலும் சமயத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு, மருத்துவமனைக்கு ஹெல்மெட் போடாமல் சென்றால்தான் சவுகரியம். இல்லையேல் ஆட்டோவுக்குத்தான் அழ வேண்டும்.

    ReplyDelete
  27. மறுமொழி > mageswari balachandran said...

    // வணக்கம் அய்யா, தலைக்கவசம் அணிவதால் எந்த உடல் தொந்தரவும் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் எங்கு வைப்பது என்ற நிலை சரிசெய்யனும், நல்ல பகிர்வு
    நன்றி. //

    சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. மறுமொழி > Bagawanjee KA said...

    // அவனவன் உயிரை அவனவன் பார்த்துக்க மாட்டானா ,எதுக்கு ஹெல்மெட் :) //

    சகோதரர் கே.பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  29. //இப்போது புதிதாக ஹெல்மெட் வாங்கி ரசீதை காட்ட வேண்டுமாம்; ஏற்கனவே வாங்கிய ஹெல்மெட்டை என்ன செய்வது? இதில் சட்டம் யாருடைய நலனுக்கு என்பது வெளிப்படை.//

    இந்த விதி தலைக்கவசம் அணியாமல் செல்வோருக்குத்தான். ஏனெனில் பலர் வாங்காமல் இருந்திருப்பார்கள். பிடிப்பட்டவுடன் வண்டியையைத் திரும்பப்பெற காவல் துறையினரிடம் காண்பிப்பதற்காக நண்பர்களுடையதை கொண்டு வந்து காட்டாக்கூடாதல்லவா? அதற்க்காகத்தான்.

    வீட்டில் முன்பே வாங்கியது இருப்பின் அதை போட்டுக்கொண்டு போனால் இந்த தொந்தரவு இருக்காது. தரம் வாய்ந்த தலைக்கவசம் அணிந்து சென்றால் தலை தப்பிக்கும் என்பதை எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

    ReplyDelete
  30. ஹெல்மெட் அணிவதால் நன்மைகள் இருந்தாலும் தங்களின் எண்ணப்பதிவுகள், கருத்துகள் மிகவும் சரியே ஐயா! மிகவும் யதார்த்த ரீதியிலான பதிவு....முதலில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறதா...? இதைப் பற்றி ஒரு இடுகை எங்கள் தளத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றது ஐயா.....

    ReplyDelete
  31. இலங்கை சாலைகள் ஒன்னும் இந்திய சாலைகளுக்கு சலச்சது இல்ல, இங்கயும் அதே ட்ராபிக் தான். நா கவனிச்சு பாத்த வரைக்கும் இந்தியா ல மோட்டார் பைக் ல சைடு மிரர் கூட இல்லாம தானே ஓடுறிங்க. எல்ல்லாம் பழக பழக சரி ஆகிடும், பலகிப்பாருங்க

    ReplyDelete
  32. ஹெல்மெட்அணிவதால் சில நண்மைகள்தான் ஆனால் தொந்தரவுகள் தீமைகள் அதிகம் அய்யா...ஒரு அனுபவஸ்தர் சொன்னது....

    ReplyDelete
  33. அருமையான அலசல் ஐயா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி

    // இந்த விதி தலைக்கவசம் அணியாமல் செல்வோருக்குத்தான். ஏனெனில் பலர் வாங்காமல் இருந்திருப்பார்கள். பிடிப்பட்டவுடன் வண்டியையைத் திரும்பப்பெற காவல் துறையினரிடம் காண்பிப்பதற்காக நண்பர்களுடையதை கொண்டு வந்து காட்டாக்கூடாதல்லவா? அதற்க்காகத்தான். வீட்டில் முன்பே வாங்கியது இருப்பின் அதை போட்டுக்கொண்டு போனால் இந்த தொந்தரவு இருக்காது.//

    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஆரம்பத்தில் இது சம்பந்தமாக வந்த அறிவிப்பு மறுபடியும் எல்லோரும் புதிதாக ஹெல்மெட் வாங்கியே ஆக வேண்டும் என்ர தொனியில் இருந்தது.

    //தரம் வாய்ந்த தலைக்கவசம் அணிந்து சென்றால் தலை தப்பிக்கும் என்பதை எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். //

    நானும் ஹெல்மெட் அணிந்து செல்பவன்தான். இருந்தாலும் சமீபகாலமே அதை போட்டுக் கொள்வதில் சில உடல் இடர்ப்பாடுகள் உண்டாகின்றன. (வயதும் ஒரு காரணம்)

    ReplyDelete
  35. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    // ஹெல்மெட் அணிவதால் நன்மைகள் இருந்தாலும் தங்களின் எண்ணப்பதிவுகள், கருத்துகள் மிகவும் சரியே ஐயா! மிகவும் யதார்த்த ரீதியிலான பதிவு....முதலில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறதா...? இதைப் பற்றி ஒரு இடுகை எங்கள் தளத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றது ஐயா..... //

    கருத்துரை தந்த சகோதரர் & சகோதரி இருவருக்கும் நன்றி. இப்போதுதான் உங்கள் பதிவையும் படித்தேன். (கொஞ்சநேரம் சென்று அங்கு வருவேன்)

    ReplyDelete
  36. மறுமொழி > HajasreeN said...

    நட்புடன் மீண்டும் வந்து கருத்துரை தந்த சகோதரர் Hajasree.N அவர்களுக்கு நன்றி.

    // இலங்கை சாலைகள் ஒன்னும் இந்திய சாலைகளுக்கு சலச்சது இல்ல, இங்கயும் அதே ட்ராபிக் தான். நா கவனிச்சு பாத்த வரைக்கும் இந்தியா ல மோட்டார் பைக் ல சைடு மிரர் கூட இல்லாம தானே ஓடுறிங்க. எல்ல்லாம் பழக பழக சரி ஆகிடும், பலகிப்பாருங்க //
    நானும் வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்பவன்தான். இருந்தாலும் சமீபகாலமே அதை போட்டுக் கொள்வதில் சில உடல் இடர்ப்பாடுகள் உண்டாகின்றன. இப்போதைய வயதும் (60) ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

    இருசக்கர வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போட்டுக் கொள்வதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை ; ஆனால் அதை கழட்டியபிறகு அதனை வைத்துக் கொண்டு படும் கஷ்டங்களுக்கு பயந்து கொண்டே நிறையபேர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். ( இங்கு இப்போது ஹெல்மெட் திருட்டு சர்வசாதாரணம்)

    ReplyDelete
  37. மறுமொழி > வலிப்போக்கன் - said...

    சகோதரர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி.

    // ஹெல்மெட்அணிவதால் சில நண்மைகள்தான் ஆனால் தொந்தரவுகள் தீமைகள் அதிகம் அய்யா...ஒரு அனுபவஸ்தர் சொன்னது.... த.ம 12 //

    ஹெல்மெட் போட்டுக் கொள்வதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை ; ஆனால் அதை கழட்டியபிறகு அதனை பாதுகாத்துக் கொள்வதில் உள்ள கஷ்டங்கள் சொல்லி மாளாது.

    ReplyDelete
  38. மறுமொழி > King Raj said...

    // அருமையான அலசல் ஐயா, வாழ்த்துக்கள். //

    கிங் ராஜ் ( ராஜராஜன் என்று நினைக்கிறேன்) அவர்களுக்கு நன்றி. காலையில்தான் ஹெல்மெட் பற்றிய உங்கள் பதிவையும் படித்தேன். (பிற்பாடு அங்கு வருவேன்)

    ReplyDelete
  39. வணக்கம்
    ஐயா
    கடலில் பயணம் செய்பவனுக்கு தற்காப்பு அங்கி போல... மோட்டர் வண்டி ஓட்டும் நமக்கு தலைக்கவசம் அவசியம் ஐயா.. எல்லா நாடுகளிலும் இந்த விதி முறை உள்ளது. அழகாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete