Friday 3 April 2015

எனது அம்மா – என்று காண்பேன் இனி?



வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாறுதல். நாடகம் போல காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நாம் இப்படியே இருந்து விடுவோம், நமக்கு ஒன்றும் வராது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது புதிதாக ஒரு குழப்பம் வந்து சேருகிறது. அன்றும் ( போன மாதம் 23 ஆம் தேதி) அப்படித்தான். வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, இரவு 11 மணி, தூங்கப் போகும் நேரம். எனது அப்பாவிடமிருந்து போன். “அம்மா மயக்கமாகி கிடக்கிறார்கள் என்ற தகவல்.

ஜென்மம் நிறைந்தது

நான் படபடப்போடு அப்பா அம்மா குடியிருந்த வீட்டிற்குச் சென்றேன். (நான் குடியிருக்கும் பகுதிக்கு அடுத்த ஏரியா) அங்கு அம்மாவின் நிலைமை மோசமாக இருந்தது. மயக்கமாகி தரையில் கிடந்தார். அம்மாவின் அருகில் எனது அப்பா (வயது 88) கவலையுடன் இருந்தார். ஏற்கனவே அப்பா தெரியப்படுத்தி இருந்ததால், எனது தங்கையும் அவரது கணவரும் அவர்களது மகனும் வந்து விட்டார்கள். நான் போனில் எனது மனைவியையும் மகனையும் உடனே வரச் சொன்னேன். எனது மனைவியை அப்பாவை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, எனது அம்மாவை மைத்துனரின் காரில், பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அந்த நள்ளிரவிலும் டாக்டர்கள் முடிந்தவரை பார்த்தார்கள். எல்லாம் முடிந்து விட்டது. 24.03.15 செவ்வாய் அதிகாலை 4 மணி அளவில் எனது அம்மாவின் மரணம். (வயது சுமார் 78) Hyper tension என்றார்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கவிஞர் வைரமுத்துவின் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. எனது அம்மாவின் பெயர் திருமதி சுந்தரம். அப்பாவின் பெயர் திருமழபாடி திருமுகம்.
  
அம்மாவின் மறைவிற்கு முன்னரே கடந்த சில நாட்களாகவே மனதில், இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத குழப்பங்கள், விசித்திரமான கனவுகள் என்று எனக்குள் வந்து கொண்டு இருந்தன. வலைப்பதிவு எழுத உட்கார்ந்தால் கூட, காரணமே இல்லாமல் நிலையாமை தத்துவங்கள் , பாடல்கள் மனதில் வந்து போயின. அதனால் அதிகம் எழுதவில்லை. அண்மையில் நடிகர் அசோகன் பற்றிய எனது பதிவினில் கூட ஒரு சோகப்பாடல் வந்து விழுந்தது.   

பட்டினத்தார் பாடல்கள்

அம்மாவை இழந்த சோகத்தில் இருந்த எனக்கு மிகவும் ஆறுதல் அளித்தவை, பட்டினத்தார் பாடிய பாடல்கள் தாம். சிலர் இவை பட்டினத்தாரால் பாடப்பட்டவை அல்ல. அவர் பெயரால் அவர் வரலாற்றைச் சொல்லும்போது வேறொருவர் எழுதியது என்றும் சொல்வார்கள். எது எப்படி இருந்த போதும், தனது தாய் இறந்த துக்கத்தினை தாங்க முடியாமல், பட்டினத்தார் வெளிப்படுத்திய பாடல்கள் மிகவும் உருக்கமானவை என்பதில் சந்தேகமில்லை.

துறவி என்றால் பட்டினத்தாரைப் போல் ஒரு துறவி காண முடியாது என்று சொல்லுவார்கள். அவரைப் பற்றி

`பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது

என்று சொல்லுகிறார் தாயுமானவர். அப்பேர்ப்பட்ட பட்டினத்தார் தனது தாயின் மீது கொண்ட அன்பை மட்டும் துறக்க மாட்டாதவராய் இருந்திருக்கிறார். பட்டினத்தார் மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர். எனவே அந்த கருத்துக்கள் அவரது பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
   
இந்த பிறவியில் நமக்கு அம்மாவாக வந்த அம்மா அடுத்த பிறவியிலும் நமக்கு அம்மாவாக வருவாரா? என்று சொல்ல முடியாது. இறந்த பிறகு அவர் வேறு ஒரு உயிருக்கு மகனாகவோ மகளாகவோ பிறந்து இருப்பார். இந்த பிறவியில் அம்மா, அப்பா, மகன்,மகள் என்று உறவாக சேர்ந்த குடும்பத்தில், இவர்கள் இறந்த பிறகு இதேபோல அப்படியே இனி வரும் பிறப்பிலும் இதே உறவோடு ஜோடி சேருவார்களா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு பிறவியிலும் நமக்கு ஒரு அன்னை, ஒரு அப்பன். இதுபோல் எத்தனையோ பிறவிகள். எத்தனையோ அன்னை, எத்தனையோ அப்பன்.

சீட்டுக்கட்டு விளையாட்டில், சீட்டுக் கட்டை கலைத்து போடுவார்கள். ஒருமுறை வரும் சீட்டுகள், அடுத்தடுத்து கலைத்து போடும் ஒவ்வொரு முறையும், அப்படியே அதேபோல் வருவதில்லை.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே

அதனால்தான் பட்டினத்தார் இனி உன்னை எந்த பிறப்பில் எனது அம்மாவாக உன்னை காண்பேன் என்று உருகுகிறார். 

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

ஒருவர் இறந்தால் அவரது உடலை புதைக்கிறார்கள்; அல்லது எரிக்கிறார்கள். நாங்கள் இறந்து போன எனது அம்மாவின் உடலை புதைத்தோம். பட்டினத்தார் தாயாரின் உடலை எரித்து இருக்கிறார்கள். அப்போது அவர் பாடிய பாடல்கள் படிப்போர் நெஞ்சை கலங்க வைக்கும்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

எனவே தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போதே அவர் மீது அன்பு காட்டுதல்தான் சிறப்பு. அதனை விடுத்து, அவர் இறந்த பிறகு, அவருக்காக விரதம் இருப்பது, பலகாரம் படைப்பது, அன்னதானம் செய்வது, தீர்த்த யாத்திரை என்பதெல்லாம் ஒரு சில நம்பிக்கைகள்தான்.

           (திருமதி சுந்தரம் (தோற்றம் 01.01.1940 மறைவு 24.03.2015)

எனது அம்மா மீது நான் அளவற்ற அன்பு காட்டினேன்; அவரும் என் மீது அளவில்லாத அன்பு வைத்து இருந்தார். எனது அம்மா கடைசி வரை தனது குடும்ப வேலைகளையும் கவனித்துக் கொண்டு, அப்பாவையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எனது அம்மா என்று காண்பேன் இனி?

கவிஞர் வைரமுத்துவின் பாடல்:

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
                                                                                
                                                     -  கவிஞர் வைரமுத்து

இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் க்ளிக் செய்யுங்கள்.


28 comments:

  1. தொப்புள்கொடியைத் தான்
    மருத்துவரும் மருத்துவிச்சியும்
    வெட்டினார்களே தவிர
    281 நாள்கள்
    எம்மைச் சுமந்து
    எம்மை ஈன்ற அன்னை ஊட்டிய
    அன்பு இணைப்பை
    எந்தக் கடவுள் வந்து துண்டித்தார்!
    நம் உடலில் ஓடும்
    செந்நீரில்
    சிவப்பு நிறம் மட்டுமல்ல
    தாயன்பும் கலந்திருக்கிறதே!
    தங்கள், தங்கள் குடும்பத்தார் துயரில்
    நானும் பங்கெடுக்கின்றேன்!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    அம்மாவின் இழப்பு தாங்கமுடியாத ஒன்றுதான்... ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன்...அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்....ஐயா...

    மரத்தில் மலரும் பூக்கள் உதிர்வது போல...
    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் நிலையும் இதுதான்...ஐயா .த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete

  4. ‘எந்த வயதும் பெற்றோரை இழக்கும் வயதல்ல’ என்பார்கள். தாயை இழந்து நிற்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இழப்பை தாங்கும் சக்தியை தங்களுக்குத் தரவும், தங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. My heart felt condolence Sir. Your words are powerful, touching and brought back all the memories.
    எனவே தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போதே அவர் மீது அன்பு காட்டுதல்தான் சிறப்பு.

    Great statement that every one of us need to follow.

    May your mother's soul rest in peace.

    ReplyDelete
  6. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களது அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போதே அவர் மீது அன்பு காட்டுதல்தான் சிறப்பு. அதனை விடுத்து, அவர் இறந்த பிறகு, அவருக்காக விரதம் இருப்பது, பலகாரம் படைப்பது, அன்னதானம் செய்வது, தீர்த்த யாத்திரை என்பதெல்லாம் ஒரு சில நம்பிக்கைகள்தான்.

    உண்மை நண்பரே இதுவே எமது எண்ணமும் தங்களது தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் தங்களது குடும்த்தாருக்கும் இறைவன் தைரியம் கொடுப்பானாக... தந்தையாரை கவனிக்குக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது. அவர்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    தங்கள் தாயாரின் இழப்பினால் பாதித்துள்ள தங்கள் தந்தை மற்றும் வீட்டில் அனைவருக்கும் ஆறுதல் சொல்லவும்.

    ReplyDelete
  9. தாய் அன்பு தெரியாதவன் நான். எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன தாயின் இழப்பு ஈடு கட்டமுடியாது. இருந்தாலும் பிறந்தவர் ஒரு நாள் போய்த்தானே ஆகவேண்டும் அது உங்களுக்கும் தெரியும் 78 ஆண்டுகள் நிறைவாக வாழ்ந்தவரின் நினைவுகளில் மன சமாதானம் அடையுங்கள்.

    ReplyDelete
  10. அம்மாவின் இழப்பு... தாங்க முடியாத ஒன்று.

    அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  11. தங்களின் துயரத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம். வார்த்தைகளால் மனச்சுமையை ஓரளவே குறைக்கமுடியும். இவ்வாறான சூழலை எதிர்கொள்ள மனத் தைரியம் உங்களுக்கு அமைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. யாராலும் இட்டு நிரப்ப முடியாத இழப்பு
    அன்னை என்பவள்
    நமக்கு உயிர் தந்தவள் மட்டுமல்ல
    தேவையெனில் நமக்காக உயிரையும் தருபவளே
    இவ்வுலகில் நமக்கு பல சொந்தங்கள் வரலாம்
    அவற்றில் ஆதியானவள் அவளே.
    தாங்கள் இழப்பை ஏற்கும் மன உறுதி கொள்ள பிரார்திக்கிறேன்.

    ReplyDelete
  13. எவரும் ஈடு செய்ய முடியாத இழப்பு..
    செய்தி அறிந்து சிந்தை கலங்குகின்றது..
    சோகத்தினை எதிர் கொள்ளும்படியான திடத்தை -
    எல்லாம் வல்ல பரம் பொருள் தந்தருள்வதாக..

    தங்களது தாயின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கின்றேன்!..

    ReplyDelete
  14. உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறோம்.

    ReplyDelete
  15. ஆழ்ந்த இரங்கல்கள் .அம்மாவின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் அண்ணா

    ReplyDelete
  16. அம்மா!!! நமது ஒவ்வொரு செல்லிலும், இரத்தத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவள்! அவளது பால் தானே நம்மை வளர்த்தது. அந்தப் பாலில் அன்னையின் இரத்தம் கலந்து தானே அதுதானே நம் உடலிலும்! ம்ம்ம் அம்மா மறைந்தால் அந்த வேதனை சொல்லி மாளாது ஐயா! அது எத்தனை வயதானாலும். புனரபி ஜனன்ம், புனரபி மரணம் எனும் ஆதி சங்கரின் பாடல் தான் நினைவுக்கு வந்தது....

    தங்களின் அன்னையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் எங்களிடமிருந்து. தங்கள் வேதனையில் நாங்களும்.....

    ReplyDelete
  17. தங்கள் வேதனையில் பங்குகொள்வதால் மட்டுமே உங்கள் வேதனை ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனாலும் எங்களுக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு ஆறுதல் சொல்லுகிறோம் என்றாவது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. ஈடு செய்ய இயலா இழப்பு ஐயா
    தங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  19. வருண் (ரிலாக்ஸ் ப்ளீஸ்) அவர்களது வலைத்தளத்தில் நான் எழுதிய கருத்துரை இது.

    // அன்புள்ள சகோதரர் வருண் அவர்களுக்கு, என்னுடைய சூழ்நிலை மற்றும் Comments Awaiting for moderation - ஐ தினமும் பார்த்து,பார்த்து வெளியிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, சமீப காலமாக நான் எனது வலைப்பதிவினில் Comments Moderation ஐ எடுத்து விட்டேன். இதுநாள் வரை எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் யாரோ ஒரு அனானிமஸ் இதனைப் பயன்படுத்தி எனது வலைப்பதிவினில் ( நான் எனது தாயாரின் மறைவைப் பற்றி துயரத்தோடு எழுதியிருக்கிறேன் என்ற நாகரிக எண்ணம் கூட இல்லாது) உங்களைப் பற்றி அவதூறாக எழுதி இருந்தார்.

    நான் நாளை (05.04.15) நடக்க இருக்கும் எனது தாயாரின் காரியங்கள் சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்த படியினால், எனது பதிவினில் வெளியான அந்த கருத்துரையை உடனே பார்க்க இயலவில்லை. எனது தந்தையாரின் வீட்டிலிருந்து வந்தவுடன் இப்போதுதான் பார்த்தேன். நான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இப்போது, உடனே அந்த கருத்துரையை நீக்கி விட்டேன். மேலும் எனது பதிவினில் மீண்டும் Comments Moderation ஐ வைத்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் இடையில் பதிவுலகில் பகைமை மூட்டுவதால் அந்த அனானிமஸுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. //

    ReplyDelete
  20. அன்புள்ள சகோதரருக்கு!

    மன வேதனை நிரம்பிய ஒவ்வொரு வரியிலும் உங்களின் மன வலி தெரிகிறது! படித்த பின் என் மனமும் கலங்கி கனமாகி விட்டது. தாயென்றில்லை, எந்த உறவின் நிரந்தரப்பிரிவும் நம் மனதை சுக்கு நூறாக்கி விடுகிறது. ஆனால் தாயென்ற உறவுக்கு மட்டுமே கடவுள் என்ற மறு பெயர் இருக்கிறது. அத்தனை சிறப்பு வாய்ந்த அன்னையை இழந்து நிற்கும் உங்களுடைய துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்! உங்கள் துயரத்தை மறைத்து தன்னில் மறுபாதியை இழந்து நிற்கும் உங்கள் தந்தைக்கு ஆறுதல் அளியுங்கள்! கடந்து செல்லும் நாட்கள் உங்களின் துயரத்தையும் கடத்திச் செல்லட்டும்!!

    ReplyDelete
  21. அய்யா,
    எனது ஆழ்ந்த இரங்கல்.

    ReplyDelete
  22. உங்க அம்மாவின் மறைவுக்காக துயரப்டுகிறேன்.

    ReplyDelete
  23. இன்று தான் தெரிந்து கொண்டேன். எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  24. அன்புள்ள அய்யா திருமிகு. தமிழ் இளங்கோ,

    வணக்கம். எனக்கு வலைத்தளம் பற்றித் தெளிவு இல்லை என்று சொன்னேன் அல்லவா? தற்பொழுதுதான் தங்களின் வலைத்தளம் ஏதேச்சயாக வருகிறேன். காரணம் எனது வலைத்தளத்தில் படைப்புகள் வெளியிடும்போது தானாக தெரிகின்ற முறையில் வைக்கவில்லை... அல்லது தெரியவில்லை என்பதே காரணம். மன்னிக்கவும்.

    தாயார் 24.03.2015 அன்று மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தங்களின் தாய்மீது வைத்திருக்கும் அளவிடமுடியாத பாசம் ... நேசம் எழுத்தில் தெரிந்தது.


    வாழ்க்கையின் சாரத்தை வார்த்தையில் வடித்தது...!

    வாழும்போதே வருவோர்க்கெல்லாம் அன்புகாட்டுவோம்...!

    வரும்பிறவி... மறுபிறவியெல்லாம் நம்பிக்கையில்லை என்று

    இப்பிறவியில் இறப்பிற்கு முன்னே சிறப்புகள் செய்தே...

    இறும்பூது அடையச் செய்வோம் ...இறந்தபிறகு தாங்கள் கூறுவதுபோல

    இறந்த பிறகு, அவருக்காக விரதம் இருப்பது, பலகாரம் படைப்பது,
    அன்னதானம் செய்வது, தீர்த்த யாத்திரை என்பதெல்லாம் வெற்றுச் சடங்குகள்

    வேண்டாமே! என்பது உண்மைதான்...!

    வைரமுத்துவின் வைரவரிகளின் ஒலிகள் அமைதியுடன் கேட்டது...

    மனம் கனத்தது.

    நன்றி.
    த.ம. 9.



    ReplyDelete

  25. தங்கள் அன்னை, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் ஐயா.

    ReplyDelete
  26. yathavan nambiApril 14, 2015 at 3:01 AM
    அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  27. எந்த ஆறுதலும் துயர் குறைக்க உதவாது என்றாலும் எழுத்து சற்றே இதம் தரும். மனோ சாமிநாதன் மேடத்தின் கருத்துகளையே நானும் வழிமொழிகிறேன். விரைவில் மீண்டு வாருங்கள் ஐயா.

    ReplyDelete
  28. எத்தனை ஆறுதல் சொன்னாலும் அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பிறந்த நொடியிலிருந்து ஏற்படும் இந்த பந்தம் நம்மை எப்போதும் கட்டுப்படுத்தும். உங்களது அம்மாவின் இழப்பு மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. காலம் தான் உங்களுக்கு சிறந்த மருந்து.
    எனது சகோதரியின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னைக்கும் பெங்களூருக்கும் போய்வந்து கொண்டிருக்கிறேன். இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete