Tuesday 1 November 2011

எம்ஜிஆரின் “டெல்லிக்கு தலை வணங்கு”


திமுக வில் எம்ஜிஆர் இருந்தபோது அவர் புரட்சி நடிகர். இந்த  பட்டத்தை அவருக்கு தந்தவர் கலைஞர் கருணாநிதி. இருவருமே திரையுலகிலிருந்து வந்தவர்கள். இவர்களால் திமுக வளர்ந்தது. திமுகவால் இவர்கள் வளர்ந்தனர். தொழில் முறையாலும், ஒரே கட்சிக் காரர்கள் என்பதாலும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் என்னவோ திமுகவாக இருந்தாலும் அப்போதைய பட அதிபர்கள் பலரும் காங்கிரஸ் காரர்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரனாக இருப்பதில் அவர்களுக்கு பல அனுகூலங்கள். படம் எப்படி எடுத்தால் காசு பார்க்கலாம் என்பது இவர்களுக்கு அத்துபடி. எனவே அவர்கள் இவர்கள் இருவரையும்வைத்து படம் பண்ணினார்கள். நஷ்டம் வராத வியாபாரம்தான் முக்கியம்.மேலும் அப்போது மக்களிடையே திமுக நல்ல ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ந்து இருந்தது. எனவே பல பட அதிபர்கள் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் சொன்னபடி காட்சிகளை அமைத்தார்கள் பாடல்களைஅமைத்தார்கள். அதே போல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களையும் படங்களில் அனுமதித்தார்கள். படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

1967 சட்ட மன்ற தேர்தல் தொடங்கி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை.தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கேரளா,ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அமையவில்லை. தமிழ் நாட்டில் திமுக இருக்கும் வரை இது நடக்காது. மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் காங்கிரஸை யோசிக்க வைத்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, இல்லையேல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் ஆட்சி.. திமுகவை உடைத்தால் ஒழிய கதை ஒன்றும் ஆகப் போவது இல்லை. அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி .பாகிஸ்தானையே இரண்டாக உடைத்தெறிந்த அம்மையாருக்கு திமுக எம்மாத்திரம்?

எம்ஜிஆர் தனக்கென்று ஒரு பிம்பம் (image) திரைப் படங்களில் உருவாக்கி வைத்து இருந்தார். இவர் நடிக்கும் படங்களில் வெற்றிலை பாக்கு போட மாட்டார், மது அருந்த மாட்டார், நியாயத்திற்காக சண்டை போடுவார், அம்மாவை தெய்வமாக நினைப்பார்,பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் , எல்லாவற்றிலும் நியாயவானாக நடந்து கொள்வார். தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் இவைகளைக் கடைபிடிப்பதாக எம்ஜிஆரின் ரசிகர்கள் நினைத்தனர்.இதனால் கட்சியில் எம்ஜிஆருக்காக மிகப் பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் (Mass)  இருந்தது. இந்தஆதரவாளர் களை குறி வைத்து டெல்லியில் காய் நகர்த்தினார்கள். எம்ஜிஆருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர்கள் மூலம் சில செய்திகள்சொல்லப்பட்டன. ஆரம்பத்தில் மறுத்த எம்ஜிஆர்  தனது இமேஜ், மேல்மட்ட அரசியல் வாதிகளால், கெட்டுப் போவதை விரும்பவில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் வரும் மத்திய அரசாங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயங்கினார். என்வே தனிக் கட்சி (1972 இல்) தொடங்கினார். அரசியலில் வெற்றியும் பெற்றார்.

இதனால் அவர் மக்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சர் (1977- 1987) ஆனபோதும் கூட மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியையே ஆதரித்தார். 1977-இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்தார். இந்திரா காந்தி பதவியிழக்கும் படியான சூழ் நிலையில் மத்தியில் ஜனதா கட்சி (1977) ஆட்சிக்கு வந்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். எனவே ஆட்சி மாறியதும் காங்கிரஸின் எதிரியான மொரார்ஜியை ஆதரித்தார் எம்ஜிஆர். 

இதனிடையே தஞ்சாவூர் பாராளுமன்ற  தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட நினைத்த இந்திரா காந்தி அம்மையாருக்கு எம்ஜிஆர்  மத்திய அரசு பயம் காரணமாக ஆதரவு தரவில்லை. மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் ஆட்சி (1979) வந்தபோது சரண்சிங்கின் கட்சிக்கு எம்ஜிஆர் ஆதரவு தந்தார். அந்த மந்திரிசபையில் பாலா பழனூர், சத்தியவாணிமுத்து ஆகியோர் அதிமுக சார்பாக மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.. கொஞ்ச நாள்தான். சரண்சிங்கும்கவிழ்ந்தார்.  காங்கிரஸ் மீண்டும் (1980) வந்தபோது திரும்ப காங்கிரஸை ஆதரித்தார். 


ஆக மத்தியில் எந்த கட்சிஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியோடு இணக்கமான  உறவு என்பதே எம்ஜிஆரின் அரசியல் பார்முலா. 
அதுதான் “டெல்லிக்கு தலை வணங்கு”


 



4 comments:

  1. நீங்கள் சொன்னது ஓரளவுக்கு சரி. ஆனால் 80ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை - இந்திரா கலைஞருடன் சேர்ந்து கலைத்து மூக்குடைப்பட்டு, எம்.ஜி.ஆர் இல்லாமல் தமிழகத்தில் காங்கிரஸ் தேறுவது கடினம் என்று இந்திரா தான் எம்.ஜி.ஆரை தம் கூட்டணியிலிருந்து விடவில்லை.

    ReplyDelete
  2. Raj said...
    வணக்கம் ராஜ் அவர்களே! எம்ஜிஆர் அவர்கள் தனக்கு தமிழ் நாட்டில் மாபெரும் மக்கள் ஆதரவு இருந்த போதிலும் மத்தியில் (தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாத மொரார்ஜி,சரண்சிங் என்று) யார் இருந்தாலும் ஆதரித்தார். அதனைத்தான் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. சுத்த பேத்தல்!

    ReplyDelete
  4. //Anonymous said...
    சுத்த பேத்தல்!
    26 November 2011 17:26//

    கருத்துரை சொன்ன Mr.அநாமதேயம் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete